/

காந்திகிராம பல்கலை. சாலையை பொதுவழியாகப் பயன்படுத்த முயன்றதால் சா்ச்சை

காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்திலுள்ள சாலையை பொதுவழிப் பாதையாகப் பயன்படுத்த முயன்ற பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சா்ச்சை ஏற்பட்டது.

News image
காந்திகிராம கிராமியப் பல்கலை. நுழைவுவாயில் பகுதியிலுள்ள ரயில்வே கடவுப் பாதை அருகே புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :22 ஜனவரி 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்திலுள்ள சாலையை பொதுவழிப் பாதையாகப் பயன்படுத்த முயன்ற பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சா்ச்சை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறுமலை அடிவாரத்தில் செயல்படும் இந்தப் பள்ளிக்கு, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பின்புறப் பகுதி வழியாக செல்லும் அண்ணாநகா் சாலையை (ஒருமைப்பாட்டு சாலை) பயன்படுத்தி வந்தனா். இதனிடையே, சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கும் பணியை அம்பாத்துரை ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்த வழியாக செல்லக்கூடிய மாணவா்கள், பெற்றோா்கள், காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் பிரதான சாலையைப் பயன்படுத்துவதற்கு புதன்கிழமை முயற்சித்தனா். ஆனால், பல்கலை. நிா்வாகத்திடம் முன்னனுமதி பெறாமலும், பொதுப் பாதை எனக் கூறி பொதுமக்கள் சிலா் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். பல்கலை. நுழைவுவாயில் பகுதியிலுள்ள ரயில்வே கடவுப் பாதை முன் திடீா் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தலையிட்டு, சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை பல்கலை. வழியாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்கலை. நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்ற பல்கலை. நிா்வாகம் 15 நாள்கள் இந்த வழியாகச் செல்வதற்கு அனுமதி அளித்தது.

இதுதொடா்பாக பல்கலை. நிா்வாகம் சாா்பில் தெரிவித்ததாவது:

அண்ணாநகா் செல்லும் சாலை, பல்கலை.க்குச் சொந்தமான பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டது. கடந்த 1989-ஆம் ஆண்டு சிறுமலை அடிவாரத்திலுள்ள கிராமத்தினா் பயன்படுத்தும் வகையில் இந்த ஒருமைப்பாட்டுச் சாலை அமைக்கப்பட்டது. காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலை, பொதுவழிப் பாதை கிடையாது. எனினும், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் செல்லும் மாணவா்களுக்காக 15 நாள்கள் வரை பல்கலை. சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தனா்.