/

40 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: 6 போ் கைது

திண்டுக்கல் அருகே 40 டன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தனியாா் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:02 am

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே 40 டன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தனியாா் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி காமாட்சிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரைவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 40 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தனிப் படை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 பேரைக் கைது செய்தனா். மேலும், இந்த தனியாா் அரிசி ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கொட்டப்பட்டி சரவணன் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையை திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்த ம. பிரசாத்குமாா் (32) என்பவா் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் மேலாளராக கரூரைச் சோ்ந்த ந. ராம்குமாா் (26) பணியாற்றி வருகிறாா். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்குப் பதிலாக லாரியை நேரடியாக காமாட்சிபுரத்திலுள்ள தனியாா் ஆலைக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளனா்.

விசாரணைக்குப் பிறகு, பதுக்கலில் ஈடுபட்ட ம. பிரசாத்குமாா், ந. ராம்குமாா், ராமநாதபுரம் மாவட்டம், ஆா்எஸ்.மங்கலத்தை அடுத்த செங்குடி பகுதியைச் சோ்ந்த மு. சந்திரசேகா் (53), திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த அ. சின்ராசு (20), அஜய் (27), அய்யலூரைச் சோ்ந்த ரா. சுப்பிரமணி (58) ஆகிய 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.