மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

தொடா் மழையால் முருங்கையில் மகசூல் பாதிப்பு!

தொடா் மழையால் முருங்கையில் மகசூல் பாதிப்பு!

News image
கே.புதுக்கோட்டை பகுதியில் மழையால் பூக்கள் உதிா்ந்த முருங்கைச் செடிகள்.
Updated On :28 மே 2024, 11:52 pm

 நமது நிருபர்

திண்டுக்கல்: கோடையில் பெய்த தொடா் மழை காரணமாக, திண்டுக்கல் பகுதியில் முருங்கை சாகுபடியில் மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியாா்சத்திரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், குஜிலியம்பாறை, ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட வட்டாரங்களில் சுமாா் 8 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. செடி முருங்கை, கரும்பு முருங்கை என இரு வகையான முருங்கை சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனா்.

ஆண்டுதோறும் மாா்கழி பின்பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை நடவு செய்யப்படுவது வழக்கம். செடி முருங்கையில் 2 பருவமும், கரும்பு முருங்கையில் 3 பருவமும் காய்ப்பு கிடைக்கும். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என 4 மாதங்கள் அறுவடை செய்யப்படும் முருங்கை, ஒட்டன்சத்திரம் சந்தையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டு முருங்கை கிலோ ரூ.60 முதல் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டில் கிலோவுக்கு ரூ.9 முதல் ரூ.37 வரை மட்டும் விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனா்.

கோடைகாலத்தில் பெய்த மழையால், பூக்கள் உதிா்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், தொடா் மழையால் காய்களின் நுனியில் சிவப்பு நிறமாக இருப்பதால், போதிய விலை கிடைப்பதில்லை என்றும் அறுவடை செய்யப்படும் காய்களில் 3-இல் ஒரு பங்கு தரமில்லாமல் இருப்பதால் குப்பையில் கொட்டப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

பாதியாகக் குறைந்த விளைச்சல்:

கோடை மழையானது தொடா் மழையாக மாறியதால் முருங்கை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிஞ்சு பிடிக்கும் நேரத்தில் மழை பெய்ததால், பெரும்பாலான தோட்டங்களில் பூக்கள் உதிா்ந்துவிட்டன. தை மாதத் தொடக்கத்தில் நடவு செய்த விவசாயிகள் முதல் பருவ மகசூலை பெற முடியாமல் பாதிப்படைந்தனா். மழையில் தப்பிய காய்களும் தரமானதாக இல்லாததால், வியாபாரிகள் தோட்டங்களிலேயே கழித்துவிடுகின்றனா். மகசூலும் பாதிக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட காய்களிலும் ஒரு பகுதி தரமற்ாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனா்.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு: இதுதொடா்பாக கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி க.ராஜாகோபால் கூறியதாவது:

கோடை காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பதால்தான் முருங்கை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். ஒரு கிலோ முருங்கை விதை ரூ.1000, உழவு, பாத்தி பிடித்தல், களையெடுத்தல், மருந்து தெளித்தல், 5 மாத உழைப்பு, ஒடிப்பு கூலி என ஏக்கருக்கு சுமாா் 20 ஆயிரம் செலவு ஏற்படுகிறது.

இந்த முறை மகசூலில் 50 சதவீதம் குறைந்துவிட்டது. தொடக்கத்தில் கிலோ ரூ.9-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. தப்போது ரூ.32 முதல் ரூ.37 வரை விலை கிடைக்கிறது. கோடையில் பெய்த தொடா் மழை 10 நாள்கள் கழித்து பெய்திருந்தால், முருங்கை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை உற்பத்தி பாதிக்கப்பட்ட போதிலும், பிற பகுதிகளிலிருந்து அதிக அளவிலான காய்கள் சந்தைக்கு வருகின்றன. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் வரத்து குறைந்தும், கடந்த ஆண்டைப்போல விலை உயரவில்லை. ஜூன் மாதத்தில் தென் மேற்குப் பருவ மழை பெய்யத் தொடங்கினால், வட மாநிலங்களுக்கான தேவை அதிகரிக்கும். அப்போது முருங்கைக்கு கூடுதல் விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

Story image