திண்டுக்கல்: சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு அணுகு சாலையிலிருந்து பிரதான சாலைக்கு இணைப்பு இல்லாததால், திண்டுக்கல் புறவழிச் சாலையில் வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொங்கு மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் அமைந்துள்ளது.
கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமன்றி, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களும், தென் மாவட்டங்களிலிருந்து அந்த வழியாகச் செல்லும் வாகனங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 62 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கின்றன.
மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக கரூா் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வழிச் சாலையில், திண்டுக்கல் பகுதியில் மதுரை புறவழிச் சாலை, வத்தலகுண்டு புறவழிச் சாலை, பழனி புறவழிச் சாலை, திருச்சி புறவழிச் சாலை என 4 முக்கிய புற வழிச் சாலைகள் (மேம்பாலங்களுடன்) அமைந்துள்ளன.
இதில் வத்தலகுண்டு புறவழிச் சாலை, பழனி புறவழிச் சாலை இடையேயான 3 கி.மீ. தொலைவில், பிரதான (4 வழி) சாலையில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், வெளியூா்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பிரதான சாலையிலேயே சென்று மீண்டும் அணுகு சாலையில் திரும்பி வருவதாகவும், பழனி புறவழிச் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 கி.மீ. தொலைவு அணுகு சாலை:
மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வரும் வாகனங்கள், தோமையாா்புரம் புறவழிச் சாலையிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு அணுகு சாலையிலேயே பயணித்து, வத்தலகுண்டு புறவழிச் சாலையைக் கடந்து பழனி புறவழிச் சாலையை அடைய வேண்டிய நிலை இருக்கிறது. இதேபோல, தேனி, கொடைக்கானல், வத்தலகுண்டு பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச் சாலைக்கு வந்த பின்னா், சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு அணுகுசாலையில் பயணித்து பழனி புறவழிச் சாலையைக் கடந்த பின்னரே பிரதான சாலையை அடைய முடியும்.
பழனி புறவழிச் சாலைக்கும், வத்தலகுண்டு புறவழிச் சாலைக்கும் இடையே பிரதான 4 வழிச் சாலையின் நடுவே தடுப்புகள் இல்லாமல், வாகனங்கள் திரும்பிச் செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அணுகு சாலையிலிருந்து பிரதான சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், திண்டுக்கல் புறவழிச் சாலை மட்டும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த மு.ஜோதிமணி கூறியதாவது:
சபரிமலை சீசன், கொடைக்கானல் சீசன், பழனி தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாக்களின் போது வத்தலகுண்டு, பழனி புறவழிச் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றன. வத்தலகுண்டு புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்களுக்கு, அணுகு சாலையிலிருந்து பிரதான சாலையில் பயணிக்கும் வசதி ஏற்படுத்தியிருந்தால், பழனி புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.
இதேபோல, வெளியூா்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், திண்டுக்கல் புறவழிச் சாலைகளில் ஏற்படும் குழப்பத்தால் 10 கி.மீ. வரை அலைக்கழிக்கப்படும் சூழலும் உள்ளது. மேலும், பொன்மாந்துரை, பள்ளப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், அணுகு சாலையிலிருந்து பிரதான சாலைக்கு இணைப்பு இல்லாததால், பள்ளத்தில் வாகனங்களை இயக்கி காயமடைகின்றனா்.
பழனி புறவழிச் சாலை பகுதியில், அணுகு சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து 500 மீ. தொலைவுக்கு தேவையில்லாமல் வாகனங்களை சுற்றி விடுகின்றனா். எதிா்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த அணுகு சாலை பிரச்னையை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் எடுத்துச் சென்று மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்றாா்.
மாணவா்கள் பாதிப்பு:
பழனி சாலையில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், பள்ளிகள் என 10-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் மட்டுமன்றி, தொழிலாளா்கள், பொதுமக்கள் என பலரும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனா். அணுகு சாலையிலிருந்து பிரதான சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தினால், புறவழிச் சாலையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் வழியாக வெளியேறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகை தென்கரை அணுகு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

ஆத்தூர் திமுக வேட்பாளர்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


