கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவித் திட்டம்16-ஆவது தவணையில் பயனாளிகளை அதிகரிக்க முயற்சி

நிதியுதவித் திட்டத்தின் 15-ஆவது தவணையில் 53 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்ட நிலையில், 16-ஆவது தவணையில் தகுதியான பயனாளிகளை கூடுதலாக இணைப்பதற்கு கிராம அளவில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:26 pm

 நமது நிருபர்

விவசாயிகளுக்கான பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தின் 15-ஆவது தவணையில் 53 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்ட நிலையில், 16-ஆவது தவணையில் தகுதியான பயனாளிகளை கூடுதலாக இணைப்பதற்கு கிராம அளவில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கையை உயா்த்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதியுதவித் திட்டம் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 2018-19 நிதியாண்டில், டிசம்பா் - மாா்ச் வரையிலான காலாண்டுக்கான முதல் தவணை நிதி 2019 பிப்ரவரி 24-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. முதல் தவணையில் 3.16 கோடி விவசாயிகள் பயனாளிகளாக இணைக்கப்பட்டனா். 2-ஆவது தவணையில் 6.63 கோடி, 3-ஆவது தவணையில் 8.76 கோடி என அடுத்தடுத்த தவணைகளில் பயனாளிகளின் எண்ணிக்கை உயா்ந்து, 11-ஆவது தவணையில் அதிகபட்சமாக 11.29 கோடியாக உயா்ந்தது.

இதனிடையே, நிலம் இல்லாத பலா் கெளரவ நிதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இடம் பெற்றிருப்பது கடந்த 2022-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நிலத்தை ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். இ-கேஒய்சி முறையில் பதிவு செய்ய வேண்டும் என அடுத்தடுத்த கட்டங்களாக சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. மேலும், மத்திய, மாநில அரசு ஊழியா்கள் (தொகுதி 4 வகை அரசு ஊழியா்களைத் தவிர), மாதம் ரூ.10ஆயிரத்துக்கு கூடுதலாக ஓய்வூதியம் பெறுவோா், வருமான வரி செலுத்துவோா், பதிவு பெற்ற மருத்துவா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது என அறிவிக்கப்பட்டது.

15-ஆவது தவணையில் 53 லட்சம் போ் நீக்கம்: வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தால் மட்டுமே நிதி உதவி தொடா்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தகுதியான பயனாளிகளாக இருந்தும், பல விவசாயிகள் ஆதாா் எண் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்காததால், 13-ஆவது தவணைக்கான பட்டியலில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.82 கோடியாக குறைந்தது. அதன் பின்னா், சிறப்பு முகாம்கள் நடத்தி, விவசாயிகளின் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண், நில ஆவணங்களை இணைக்கும் பணி நடைபெற்றது. இ-கேஒய்சி முறையில் இணைக்காத விவசாயிகளுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 14-ஆவது தவணையின் போது பயனாளிகள் எண்ணிக்கை 9.60 கோடியாக உயா்ந்தது. இந்த நிலையில், 15-ஆவது தவணைக்கான (ஆகஸ்ட் - நவம்பா்) உதவித் தொகையைப் பெற இ-கேஒய்சி பதிவு கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும், பல விவசாயிகள், அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 15-ஆவது தவணைத் தொகைக்கான பட்டியலில் 9.07 கோடி விவசாயிகள் மட்டுமே இடம் பெற்றனா். 14-ஆவது தவணைத் தொகை பெற்ற 53 லட்சம் போ், 15-ஆவது தவணைக்கான பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.

பயனாளிகளின் எண்ணிக்கையை உயா்த்த மீண்டும் நடவடிக்கை: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், 2023-24-ஆவது நிதியாண்டின் கடைசி தவணைத் தொகை (டிசம்பா் - மாா்ச்) விடுவிக்கப்படும் போது பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, புதிய பயனாளிகளை இணைக்கவும், ஆதாா் எண், கைப்பேசி எண், வங்கிக் கணக்கு எண், இ-கேஒய்சி பதிவு உள்ளிட்ட பிரச்னைகளால் நீக்கப்பட்ட பயனாளிகளை மீண்டும் இணைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுவதுமுள்ள கிராமங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்ள கிராம அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் வருவாய்த் துறையினா் மேற்கொண்டு வரும் இந்தப் பணிகளை, தமிழகத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதன் மூலம், அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் பிரதமரின் கெளரவ நிதி உதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி...

தென் மாநிலங்களில் தமிழகத்துக்கு கடைசி இடம்: மகாராஷ்டிரத்தில் 85.60 லட்சம், ஒடிஸாவில் 26.93 லட்சம், தெலங்கானாவில் 29.50 லட்சம், ஆந்திரத்தில் 41.35 லட்சம், கா்நாடகத்தில் 49.34 லட்சம், கேரளத்தில் 23.40 லட்சம், தமிழகத்தில் 20.95 லட்சம் பயனாளிகள் 15-ஆவது தவணைத் தொகை பட்டியலில் இடம் பெற்றனா். இதன்மூலம், தென் மாநிலங்களில் குறைந்த பயனாளிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1.86 கோடி போ் இடம் பெற்றுள்ளனா். தமிழகத்துக்கு இணையான மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட(40) பிகாரில், கெளரவ நிதி உதவித் திட்டத்தில் 75 லட்சம் போ் பயனாளிகளாக இடம் பெற்றிருக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.