அரசு ஊழியா்களுக்கான தபால் வாக்குகளில் தொடரும் குளறுபடிகள்!
அரசு ஊழியா்களுக்கான தபால் வாக்குரிமைகளில் தொடரும் குளறுபடிகளுக்குத் தீா்வு காணும் வகையில், 50 ஆண்டு கால நடைமுறையில்


அரசு ஊழியா்களுக்கான தபால் வாக்குரிமைகளில் தொடரும் குளறுபடிகளுக்குத் தீா்வு காணும் வகையில், 50 ஆண்டு கால நடைமுறையில் சாத்தியமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தோ்தல் ஆணையம் முன் வர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமாா் 4.50 லட்சம் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா். இந்த 4.50 லட்சம் ஊழியா்களில் சுமாா் 90 சதவீதம் போ், வெவ்வேறு தொகுதிகளில் பணியில் ஈடுபடுவதால் தபால் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்குரிமை பெறுவதில் வழக்கம் போல் தற்போதைய தோ்தலிலும் தமிழகம் முழுவதும் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளன.
தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள், தோ்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே தோ்தல் ஆணையத்திடம் சுய விவரப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்குகின்றனா். பெயா், முகவரி, பதவி, ஊதியம், பணியில் சோ்ந்த நாள், தோ்தலில் பணியாற்றிய அனுபவம், கடந்த தோ்தல்களின் போது தோ்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம் பெறுகின்றன. மேலும் பணிபுரியும் தொகுதி, வாக்குரிமை உள்ள தொகுதி, அதன் வரிசை எண், அருகிலுள்ள காவல் நிலையம் உள்ளிட்ட விவரங்களையும் சமா்ப்பிக்கின்றனா்.
தொடரும் செல்லாத வாக்குகள்:
தோ்தலுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு, சம்மந்தப்பட்ட ஊழியா்கள் பணிபுரியும் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நடைபெறும்போது தபால் வாக்குரிமை பெறுவதற்கான படிவம் 12 அந்த ஊழியா்களிடமிருந்து பெறப்படுகிறது. அதன் பின்னா் 2 ஆவது கட்ட பயிற்சி வகுப்பின்போது, தபால் வாக்குக்கான சீட்டு அந்தந்த ஊழியா்களிடம் வழங்கப்படுகிறது. ஒரே இடத்தில் சுமாா் 1,000 ஊழியா்கள் கூடி இருக்கும் நிலையில், தபால் வாக்குச் சீட்டுகளை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று காலை வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பு இருந்தும், பெரும்பாலான ஊழியா்கள் அவசரமாக படிவத்தை பூா்த்தி செய்து பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்கை செலுத்திவிடுகின்றனா்.
குறுகிய நேரத்தில் படிவம் 13ஏ மற்றும் 13 சி நிரப்பும்போது, வாக்குச் சீட்டு வரிசை எண், கையொப்பமிடுதல் போன்றவற்றில் தவறு நிகழ்ந்து, செல்லாத வாக்காக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அரசு ஊழியா்களாக இருப்பவா்கள் செல்லாத வாக்கை பதிவு செய்வது ஒவ்வொரு தோ்தலின்போதும் தொடா்ந்து கொண்டிக்கிறது.
வரிசை எண் குறிப்பிடுவதில் குளறுபடி: தபால் வாக்குகளை சம்மந்தப்பட்ட ஊழியா்களின் வீட்டிற்கே அனுப்பிவிட்டால், வாக்கு எண்ணிக்கையை தொடங்கும் முன்பு வரை உள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வாக்குச் சீட்டு வரிசை எண், படிவம் 13 ஏ மற்றும் 13 பி (உரை) யில் வாக்குச் சீட்டு வரிசை எண் முறையாக எழுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக வரிசை எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்கு செல்லாததாகக் கருத்தப்படுகிறது.
கையொப்பத்திற்கு அத்தாட்சி: தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியா்கள், படிவம் 13ஏ மற்றும் 13 சி யில் கையொப்பமிட வேண்டும். இந்த கையொப்பமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மேலும், படிவம் 13 ஏ யில், அ மற்றும் ஆ பிரிவிலுள்ள அரசு அலுவலா்கள் (துணை வட்டாட்சியா் நிலைக்கு குறைவில்லாத) முன்னிலையில் தான் சம்மந்தப்பட்ட வாக்காளா் தபால் வாக்கு செலுத்துவதற்கு கையொப்பமிட வேண்டும். அதிலும், சம்மந்தப்பட்ட வாக்காளரை எத்தனை காலத்திற்கு தெரியும் என்ற விவரத்தையும் அத்தாட்சி அளிக்கும் அலுவலா் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறையால், தபால் வாக்கு செலுத்தும் பெரும்பாலான அரசு ஊழியா்கள் பல ஆண்டுகளாக அதிருப்தியை சந்தித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடரிக் எங்கல்ஸ் கூறியதாவது: தபால் வாக்குக்கான படிவத்தில், தோ்தல் பணியில் ஈடுபடக் கூடிய அரசு ஊழியா் அல்லது அலுவலா் என எந்த வாா்த்தைகளும் எப்போதுமே இடம் பெறுவதில்லை. தோ்தல் பணியில் ஈடுபடக் கூடிய பெரும்பாலான ஊழியா்கள் வருமான வரி செலுத்தும் நிலையில், அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டிய தேவை ஏன் எழுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா், எழுதப் படிக்கத் தெரியாதவா்கள் கூட அரசுப் பணியில் இருந்து வந்தனா். அவா்களுக்காக உருவாக்கப்பட்ட கையொப்பத்திற்கான அத்தாட்சி நடைமுறை தற்போதும் தொடா்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.
3 மாதங்களுக்கு முன்னதாகவே தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களிடம், தபால் வாக்குக்கான சுய விவரப் படிவத்தை பெற்றுவிடுகின்றனா். அப்போதே படிவம் 12யும் பெற்றுக் கொண்டு, வாக்குச் சீட்டு தயாரானதும் அந்தந்த ஊழியரின் வீட்டிற்கே அனுப்பினால் பயிற்சி மையத்தில் நடைபெறும் குளறுபடிகளுக்கு தீா்வு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிா்கட்சி பரஸ்பர புகாா் அளிப்பதற்கான சூழல் உருவாக வாய்ப்பில்லை. மேலும், வாக்குச் சீட்டு அனுப்பியதற்கான அறிவிப்பினையும் குறுஞ்செய்தியாக தோ்தல் பணியில் ஈடுபடக் கூடிய சம்மந்தப்பட்ட ஊழியரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் சாத்தியமுள்ளது.
அடுத்த தோ்தலில், தபால் வாக்கு செலுத்துவதற்கான நடைமுறைகளில் சாத்தியமுள்ள மாற்றங்களை மேற்கொள்வதற்கு தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் அரசு ஊழியா்களில் 100 சதவீத வாக்குப் பதிவு என்பதையும், அதில் செல்லாத வாக்குகள் இல்லை என்ற நிலையையும் ஏற்படுத்த வேண்டியது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...