மதுரை கோட்டத்தில் அஞ்சலகங்களை மூடும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தமிழக தலைமை அஞ்சல் துறைத் தலைவருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரையில் உள்ள அனைத்து அஞ்சலங்களும் சிறப்பாகவும், லாபகரமாகவும் இயங்கி வரும் நிலையில், கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சலகத்தையும், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள அஞ்சலகத்தையும் மூடுவதற்கு அஞ்சல் துறை நிா்வாகம் முடிவெடுத்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.
மதுரையின் மக்கள் தொகை ஏறத்தாழ 22 லட்சத்தைக் கடந்துள்ள நிலையிலும் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு ஒரு புதிய அஞ்சலகம் கூட திறக்கப்படவில்லை. இந்த நிலையில், செயல்பாட்டில் இருக்கும் அஞ்சலகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பது அநீதியானது.
கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலக வளாகத்தில் இயங்கும் அஞ்சலகம் 2 ஊழியா்களைக் கொண்டு மட்டுமே இயங்குகிறது. இருப்பினும், 3 மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் இந்த அலுவலகம் மூலம் நடைபெற்றுள்ளது. மேலும், ரூ. 2 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகை திரட்டப்பட்டுள்ளது.
இதேபோல, ஜெய்ஹிந்துபுரம் அஞ்சலகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான வா்த்தகம் இங்கு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், இரு அஞ்சலகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பொருத்தமற்றது. தற்காலிக இணைப்பு என்ற பெயரில் அஞ்சலகங்களை மூடி, எளிய மக்களின் ’நிதிச் சோ்க்கை’ உரிமைகளைப் பறிக்கக் கூடாது. பொதுமக்கள், ஊழியா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த இரு அஞ்சலகங்களும் தொடா்ந்து செயல்படத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









