/

பகவதி அம்மன் கோயில் கடைகளை அகற்ற உத்தரவு

News image
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :16 பிப்ரவரி 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முருகன், முத்துக்குமாா், நூருதீன், சுதன், முகமது சுலைமான் உள்ளிட்ட பலா் இணைந்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்:

பகவதி அம்மன் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகள் இந்து அறநிலையத் துறையால் சட்டப்படி வாடகைக்கு விடப்பட்டவை. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வருகிறோம்.

இந்த வியாபாரத்தில் கிடைக்கும் வருவாய் எங்களது வாழ்வாதாரமாக விளங்குகிறது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா், பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்றுவது தொடா்பாக அறிவிக்கை வெளியிட்டாா். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. ஆகவே, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் எங்களை வெளியேற்றக் கூடாது. இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

கன்னியம்பலம் மண்டபத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. இதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இந்து சமய அறநிலைய துறை உணரவில்லை.

இணை ஆணையா் கோயிலின் சொத்துக்களை லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையால் வாடகையாளா்களாக நியமிக்கப்பட்டு இருந்தாலும், அது தொல்லியல் தளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த பழமையான நினைவுச் சின்னத்தை பாதுகாக்க கடைகளை கட்டாயமாக அகற்றப்பட வேண்டும். எனவே,பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் கடை நடத்துவோா், அங்கிருந்து தாங்களாகவே, தங்கள் கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையா், அவா்களை அங்கிருந்து அகற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.