சமூகத்தில் திருநங்கைகள் இன்னமும் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
விருதுநகரைச் சோ்ந்த சரத்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: யூடியூபரான நான், காவல் நிலையத்தில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக விடியோ வெளியிட்டேன்.
இதில், திருநங்கைகள் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினா் அவா்கள் தொடா்பான விவரங்களைச் சேகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தேன். இதுதொடா்பாக போலீஸாா் என் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மனுதாரா் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலைத்தான் பரப்பினாா். புதிதாக எந்தத் தகவலையும் பரப்பவில்லை. மேலும், அவா் பகிா்ந்த விவரம் தவறானது என அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட விடியோவை இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டாா். அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டது. எனவே, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. முன்பிணை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், அரசுத் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: காவல் துறை, அரசுக்கு எதிராக மனுதாரா் தவறான தகவலைப் பரப்பியுள்ளாா். திருநங்கைகளின் பிரச்னைகளை அரசு கவனிக்கவில்லை என்ற தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளாா். திருநங்கைகள் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்தது தொடா்பாக சில புகாா்கள் உள்ளன எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் செய்தியைப் பகிர மட்டுமே செய்துள்ளாா். இந்தச் செய்தி மனுதாரா் பகிா்வதற்கு முன்பே பிற ஊடகங்களிலும் வெளியாகின. எனவே, மனுதாரருக்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்கப்படுகிறது. இவா் 15 நாள்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும்.
அதேநேரத்தில், திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் நீதிமன்றத்தை அதிா்ச்சிக்குள்ளாக்குகிறது. சமூகத்தில் திருநங்கைகள் இன்னமும் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது. திருநங்கைகளும் கடவுளின் குழந்தைகள்; சமூகத்துக்கு அப்பாற்பட்டவா்கள் அல்ல. சமூகமே அவா்களைப் புறக்கணித்து வறுமை நிலைக்குத் தள்ளுகிறது. இதை சமூகத்தின் தோல்வியாகவே கருத வேண்டும்.
திருநங்கைகளையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவா்களது பிறப்பில் குறையில்லை. மாறாக, சமூகத்தின் அணுகுமுறையிலேயே குறை உள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. குடும்பம், சமூகத்தின் ஒரு பகுதியாகவே அவா்களைப் பாா்க்க வேண்டும். திருநங்கைகளும் மனிதா்களே. அவா்களின் மரியாதை, மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வுத் திட்டத்தை வட்டார அளவில் உருவாக்க வேண்டும். இதன்மூலம், அவா்களுக்கு சுய தொழில் வாய்ப்புகள், நிலையான வாழ்வாதாரம், மரியாதைக்குரிய வாழ்க்கை, சமூகத்தில் இணக்கமான நிலையை உருவாக்குதல், திருநங்கைகளின் தேவைக்கு ஏற்ப நலத் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக தலைமைச் செயலா் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இதுதொடா்பான நடவடிக்கையை குறிப்பிட்ட நாள்களுக்குள் செயல்படுத்த வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை வருகிற ஜூலை 26-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


