ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின்தடையால் பிளாஸ்டிக், ஜவுளி உற்பத்தி பாதிப்பு

மதுரை, பிப்.19: மதுரை மாவட்டத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் பிளாஸ்டிக், ஜவுளி உற்பத்தி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் தினமும் முழுமையான வேலை கிடைக்காமல் அவதியுறுவதாகவும் வ

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:16 pm

ஜெயப்பாண்டி

மதுரை, பிப்.19: மதுரை மாவட்டத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் பிளாஸ்டிக், ஜவுளி உற்பத்தி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் தினமும் முழுமையான வேலை கிடைக்காமல் அவதியுறுவதாகவும் வர்த்தக சங்கப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிப்பில் 6 ஆயிரம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் நேரடியாக 1.50 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

சென்னையில் பிளாஸ்டிக் சேர்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதற்கு அடுத்து, கடந்த 15 ஆண்டுகளாக மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி தொழில் வளர்ந்து வருகிறது.

மதுரையில் பிளாஸ்டிக் தயாரிப்பில் 350 முதல் 400 வரையில் சிறிய நிறுவனங்களும், 200 பெரிய நிறுவனங்களும் உள்ளன. சிறிய நிறுவனங்களில் பலசரக்கு பொருள்கள் வைக்கும் சிறிய டப்பாக்களும், பொம்மைகளும் தயாரிக்கப்படுகின்றன. மதுரை நகரில் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் ஜெய்ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம், கப்பலூர், நவரத்னாநகர், வண்டியூர் பகுதிகளில் அதிகமாக உள்ளன.

பெரிய நிறுவனங்களில் பி.வி.சி. பைப்புகள், தண்ணீர் டேங்குகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளும் மதுரையில் ஏராளமாக தயாரிக்கப்படுகின்றன. மதுரையில் தயாராகும் பிளாஸ்டிக் பொருள்களில் பெரும்பாலானவை கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.

பிளாஸ்டிக் தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். பெரிய நிறுவனங்களில் 10 தொழிலாளர்களில் 5 பேர் நிரந்தரமாகவும், 5 பேர் தினக் கூலியாகவும் பணிபுரிகின்றனர். தினக்கூலியாக ரூ.150 முதல் ரூ.350 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் தொழிலில் மறைமுகமாக, மதுரை நகரில் சுமார் 40 ஆயிரம் பேர் வரையில் வேலைவாய்ப்பைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

பிளாஸ்டிக்கில் சிறிய டப்பா, பொம்மைகள் போன்றவை மோல்டு எனப்படும் அச்சு வார்ப்பு மூலமே வார்க்கப்படுகிறது.

இதுபோன்ற தயாரிப்புகள் கையால் இயக்கப்பட்டாலும், அந்த வேதிப் பொருள்களை இலகுவாக்குவதற்கு மின்சாரம் அவசியம். மின்தடையால் வேதிப்பொருள்களால் தரமான பொருள்களை தயாரிக்க முடிவதில்லை. இதனால், உற்பத்திக்கான பொருள் விலை கூட உற்பத்திக்குப் பிறகு கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், ஜெனரேட்டர் வைத்து இயக்கும் பெரிய பிளாஸ்டிக் நிறுவனங்களில் கூட தினமும் ரூ. 6 ஆயிரத்துக்கு டீஸல் வாங்கும் நிலை ஏற்படுகிறது. அந்த அளவுக்கு உற்பத்தியும் இருப்பதில்லை.

இதனால், நிரந்தர ஊழியர்களைத் தவிர தாற்காலிக ஊழியர்களுக்கு போதிய வேலை அளிக்க முடிவதில்லை என்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மின்தடை பாதிப்பு குறித்து, மதுரை செüராஷ்டிர சேம்பர் ஆப் காமர்ஸ் முன்னாள் தலைவர் சி.கே. சேகர் கூறியதாவது:

மதுரை நகரில் தற்போது தொடர்ந்து ஏற்படும் திடீர் மின்தடையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது பிளாஸ்டிக் தொழில்தான்.

மின்தடை பாதிப்பால் உற்பத்தி குறைவு, வேதிப்பொருள்கள் கலவை பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் தவிர்க்க முடியாததாகிறது. ஆனாலும், பிளாஸ்டிக் பொருள்களை விலை ஏற்றமுடியாது. மேலும், மின்தடையால் அனைத்து ஊழியர்களுக்கும் வேலை தரமுடியாத நிலையும் ஏற்படுகிறது என்றார்.

ஜவுளித்தொழில்

மதுரையில் பிளாஸ்டிக் தொழிலுக்கு அடுத்து ஜவுளி உற்பத்தியே மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகிறது. மதுரை பகுதியில் 5 ஸ்பின்னிங் மில்கள், 40-க்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள், 10 கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இதில் கப்பலூர், வண்டியூர், நிலையூர் உள்ளிட்ட பகுதிகளில், ஜவுளித் தொழில் அதிகம்.

கடந்த 4 ஆண்டாக ஏற்பட்டுள்ள தொடர் மின்தடையால், தற்போது பல நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இவற்றில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், முழுமையாக வேலை கிடைக்காமல் அரைகுறை ஊதியத்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இவ்விரு பிரிவுத் தொழிலாளர்களுக்கு அடுத்து பட்டறைத் தொழிலும் அதிகமாக மின்தடையால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மதுரை மடீட்சியா தலைவர் எஸ். மணிமாறன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் மின்தடையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி மட்டுமல்லாது தொழிலாளர்களின் வருவாயும் பாதித்துள்ளது. ஆகவே, தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை சீராக வழங்குவது அவசியம் என்றார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல்: தினமும் 8 மணி நேரம் மின்வெட்டால், சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற ஒரு யூனிட்டுக்கு ரூ.15 செலவாகிறது. மின்சாரம் இல்லாததால், சிறிய தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைகிறது. இதனால் முன்பணம் கொடுத்து ஆர்டர் செய்தவர்களுக்கு, உரிய நேரத்தில் பொருள்களை உற்பத்தி செய்து தர முடியவில்லை.

மேலும், நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்தும் நிலையும் ஏற்படுகிறது. மூன்று ஷிப்டு நடைபெற்ற தொழிற்சாலைகளில், தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே நடைபெறும் நிலை உள்ளது.

மின்தடையால் 20 சதவிகித சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொழிற்சாலைகளுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.