இந்நிலையில், திறப்புவிழா காணப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், இந்தப் புதியக் கட்டடம் தற்போது வரை பயன்பாட்டுக்குத் திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அலுவலகம் நகர்மன்றக் கூட்ட அரங்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக, நகர்மன்றக் கூட்ட அரங்கில் போதிய இடவசதி இல்லாத நிலையில், ஒரே இடத்தில் அனைத்துப் பிரிவுகளும் செயல்பட்டு வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் நேரங்களில் நகராட்சி அலுவலகம் செயல்பட முடிவதில்லை என்றும், நகர்மன்றக் கூட்டத்துக்காக அலுவலக ஆவணங்கள் மற்றும் இருக்கைகளை ஒதுக்கிவைப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர். நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.