ஹைவேவிஸ் மலைச் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா?
தேனி, பிப். 28: ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால், அப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இ


தேனி, பிப். 28: ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால், அப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சின்னமனூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஹைவேவிஸ் பேரூராட்சி.
இப் பகுதியில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. 6000-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். சுற்றுச் சூழல் மாசு இல்லாத இப் பகுதியில் உள்ள மலைகள், தேயிலைத் தோட்டங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றைக் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஹைவேவிஸ் எல்லையைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும், தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள இடங்கள் வனத் துறைக்குச் சொந்தமானதாகவும் உள்ளன.
சின்னமனூரை அடுத்துள்ள ஹைவேவிஸ் நுழைவுப் பாதையிலிருந்து மலைக் கிராமங்களுக்கு செல்லும் 45 கி.மீ., தூரமுள்ள சாலைகள் முழுவதும் தனியார் தேயிலை எஸ்டேட்களுக்குச் சொந்தமானவையாகும். 1930-ம் ஆண்டு முதல் இச் சாலையை எஸ்டேட் நிறுவனங்களே பராமரித்து வந்துள்ளன. இச் சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போக்குவரத்து வசதிக்காக இப் பகுதிக்கு தினமும் இரு அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
ஹைவேவிஸ் சாலையை எஸ்டேட் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகப் பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் மண் சரிவு, சாலை அரிப்பு ஏற்பட்டு பஸ்களை இயக்க முடியாமல் அவ்வப்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலையைச் சீரமைக்கவும், அப் பகுதியை சுற்றுலாத் தலமாக்கவும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாததால், எஸ்டேட் நிறுவனங்கள் ஹைவேவிஸ் சாலையை அரசிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளது. இதையடுத்து, ஹைவேவிஸ் மலைச் சாலையை கையகப்படுத்தவும், அப் பகுதியை சுற்றுலாத் தலமாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஹைவேவிஸ் பகுதியைச் சுற்றுலா தலமாக்கும் திட்டத்தின்கீழ் மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு கோடை விழா நடத்தப்பட்டது. சாலையை கையகப்படுத்தவும், தமிழ்நாடு சுற்றுலா கழகம் மூலம் நிதி உதவி பெற்று சாலையைச் சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதுவரை பணிகளை தொடங்கவில்லை. இதனால் சேதமடைந்த சாலையில் தோட்டத் தொழிலாளிகள், சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பி.முத்துவீரன் கூறியதாவது:
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிதியிலிருந்து சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், சுற்றுலா வளர்ச்சிக்குத் தேவைப்படும் இடங்களை எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டியுள்ளது. மேலும், இப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், அரசு அலுவலக கட்டடங்களுக்கும் இடம் தேவைப்படுகிறது. இதற்காக மலைப் பகுதியை சர்வே செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசுக்குத் தேவையான இடம் கையகப்படுத்தப்பட்டதும் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்றார்.
ஹைவேவிஸ் மலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பதும், மழை காலம் துவங்கும் முன்பு சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைத்து தடையற்ற, பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...