கோயில் காளை இறப்பால் சோகத்தில் மூழ்கிய கிராமம்
மதுரை, ஜூலை 27: மதுரை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 9 மாடுகள் இறந்த நிலையில் கோயில் காளையும் இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மனிதர் இறந்தால் செய்யும் சடங்குகள் போல காளைக்கும் சடங்குகளைச் செய்த


மதுரை, ஜூலை 27: மதுரை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 9 மாடுகள் இறந்த நிலையில் கோயில் காளையும் இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மனிதர் இறந்தால் செய்யும் சடங்குகள் போல காளைக்கும் சடங்குகளைச் செய்து நன்றி காட்டியுள்ளனர் அந்த மக்கள்.
வீச்சரிவாள், வெட்டுக்குத்து எனத் திரைப்படங்களில் முரட்டுத்தனமான மனிதர்கள் வாழும் பூமியாக மதுரை மாவட்டம் சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை அருகே உள்ள ரெங்கராஜபுரத்தில் தான் கோயில் காளை இறந்ததை தங்கள் வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவமாகவே பாவித்துள்ளனர் அக்கிராம மக்கள். ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ளது ரங்கராஜபுரம். இந்த ஊரில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான "நந்தி மூஞ்சி' காளை கடந்த 8 ஆண்டாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
கோயில் காளை என்பதால் ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாகவே இக்காளையை பாவித்துள்ளனர். அதற்கேற்ப அக்காளையும் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றுள்ளது.
இக்காளையானது இதுவரை சுமார் 200 ஜல்லிக்கட்டுகளில் ஊர் சார்பில் பங்கேற்று 11 தங்கக் காசுகள், 10 சைக்கிள்கள், 4 பீரோக்கள், 6 கிரைண்டர்கள், 10-க்கும் மேற்பட்ட குத்துவிளக்குகள், ஏராளமான சுவர்க் கடிகாரங்கள் எனப் பரிசுகளையும் குவித்துள்ளது.
மேலும் ஊரில் யார் வீட்டில் முகூர்த்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து வந்துள்ளனர். முக்கியமான காரியத்துக்குச் செல்வோர் காளையை வணங்கிவிட்டுச் சென்றால் அக்காரியம் வெற்றியடைந்ததாகவும் அவ்வூர் இளைஞர் சுரேஷ் கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் இக்காளை திடீரென உடல்நலம் குன்றி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தது. இதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் காளியம்மன் கோயில் முன் மாட்டு வண்டியில் இருந்த காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் பெண்கள் கூடி ஒப்பாரி வைத்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். கிராமத்தில் மதிப்புக்குரியவர் இறந்தால் செய்யும் சடங்குகள் அனைத்தும் காளைக்கு செய்யப்பட்டன. இறப்புக்கு நிகழ்த்தப்படும் கொட்டுமேளம், வாணவேடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஊரில் யாரும் காலையில் இருந்து சாப்பிடவில்லை. குழந்தைகள் கூட பள்ளிக்குச் செல்லவில்லை. வெளியூரில் வசித்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் காளையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
காளையை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் முன் அதனுடன் திரிந்த சிறிய கன்றையே அடுத்த கோயில் காளையாகத் தேர்வு செய்தனர். அதன்பின் காளை அடக்கம் செய்ய ஊர்வலமாக சகல சடங்குகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதிச் சடங்கின்போது கிராமத்தில் தெருவுக்கு ஒருவர் என்ற முறையில் இளைஞர்கள் காளைக்காக மொட்டை அடித்துக் கொண்டனர்.
இக்கிராமத்தினர் மாடு வளர்ப்பு, விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இக்கிராமத்தில் 1000 பால் மாடுகள் உள்ளிட்ட 1500 மாடுகள் உள்ளன. மதுரை வட்டாரத்தில் கால்நடைகள் அதிகம் உள்ள ஊர்களில் இவ்வூரும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தினமும் இவ்வூரிலிருந்து சுமார் 1000 லிட்டர் பால் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனையாகிறது. பால் விற்பனை இவ்வூரின் மிகமுக்கிய வருவாயாக உள்ளது. இங்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவ முகாம் நடத்த கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கால்நடை மருத்துவர்கள் யாரும் வருவதில்லையாம்.
இதனால், தனியார் கால்நடை மருத்துவரையே மக்கள் அணுகும் நிலை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்பதால் பலர் கால்நடைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் சிகிச்சைக்கு செல்வதையும் தவிர்த்துள்ளனர்.
இந்தக் காரணத்தாலே சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த மாடுகளையும் இழந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் இவ்வூரில் 9 மாடுகள் இறந்துள்ளன. தற்போது கோயில் காளையும் இறந்துள்ளது. மாடுகளின் இறப்புக்கு இதுவரை காரணம் ஏதும் தெரியவில்லை. ரங்கராஜபுரம் மட்டுமல்ல இப்பகுதியில் மாடுகள், ஆடுகள் அவ்வப்போது திடீர் திடீரென இறப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களது கோரிக்கையாகும்.
சில மாதங்களுக்கு முன் மதுரை அருகே வெளிச்சநத்தம் பகுதியில் கோயில் காளை ஒன்று திடீரென இறந்ததால் அப்பகுதி மக்கள் துக்கம் அனுஷ்டித்து, மனிதர்களுக்கு செய்வது போல இறுதிச் சடங்கை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...