மதுரையில் அதிகரிக்கும் மலேரியா பாதிப்பு
மதுரை, ஜூலை 10: மதுரை கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் விளைவாக பெரும்பாலான மக்கள் மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுர


மதுரை, ஜூலை 10: மதுரை கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் விளைவாக பெரும்பாலான மக்கள் மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை நகரில் கடந்த சில நாள்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவது அதிகரித்துள்ளது. ஜெய்ஹிந்த்புரம், திடீர்நகர், செல்லூர், சென்ட்ரல் மார்க்கெட் பகுதி, சிந்தாமணி, அனுப்பானடி மற்றும் பழங்காநத்தம் என பல பகுதிகளில் பொதுமக்களுக்கு மலேரியா காய்ச்சல் அதிகம் பரவி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
புறநகர் பகுதிகளான புதூர் கற்பக நகர், சிந்தாமணி, விரகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மலேரியா, டைபாய்டு என தொற்றுநோய் பாதிப்புக்கு ஏராளமானோர் ஆளாகிவருவதும் தெரியவந்துள்ளது.
இப்பகுதிகளில் வயிற்றுப்போக்கும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சல் என 40 முதல் 60 பேர் வரை வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு மலேரியா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதே தொற்றுநோய் பாதிப்புக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநகராட்சி பொறியாளர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. நகரில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி வருவதால் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அதிகரித்துவரும் மலேரியா பாதிப்பு குறித்து மாநகர் சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, நகரில் 4 மண்டலங்களுக்கும் தினமும் 25 பேர் வீதம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் மண்டலத்துக்கு தினமும் 5 முதல் 10 லிட்டர் வரை கொசு ஒழிப்பு மருந்தும், கொசு முட்டை ஒழிப்பு மருந்தும் தெளிக்கப்படுகிறது. அதன்படி தினமும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொசு ஒழிப்புக்கே செலவிடப்படுகிறது என்றார்.
மதுரை மாநகரில் தற்போது தினமும் வீடு, ஹோட்டல் உள்ளிட்டவற்றிலிருந்து சுமார் 9 கோடி லிட்டர் (90 மில்லியன் லிட்டர்) கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 1924 ஆம் ஆண்டில் மதுரையில் தினமும் சுமார் 3 கோடி லிட்டர் கழிவு நீர் மட்டும் வெளியேறும் நிலைதான் இருந்தது.
கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மதுரை சென்ட்ரல் மார்க்கெட், ஆரப்பாளையம், சிந்தாமணி உள்ளிட்ட 8 இடங்களில் கழிவுநீரேற்றும் நிலையம் (பம்ப்பிங் ஸ்டேஷன்) அமைக்கப்பட்டன.
ஆனால், மதுரை மாநகர் 1963 முதல் செல்லூர், அண்ணாநகர், கே.கே.நகர் என விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதல் கழிவு நீரேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி தற்போது 33 கழிவு நீரேற்றும் நிலையங்கள் உள்ளன.
மதுரை வடக்கு, தெற்கு மாநகராட்சி மண்டலங்களில் இப்பொழுது மட்டும் தினமும் சுமார் 6 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில் இம்மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீரேற்றும் நிலையத்தில் உள்ள மோட்டார் பம்ப் திறன் மிகவும் குறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது 1924 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்பவும், அன்றைய நிலையில் வெளியேறிய கழிவுநீரை அகற்றும் வகையிலுமே அவற்றின் திறன் உள்ளன.
ஆனால், தற்போது மதுரை மாநகரில் மக்கள் தொகை பல மடங்கு கூடுதலாகிவிட்டது. குறிப்பாக நகரில் விடுதிகளும், ஹோட்டல்களும் பெருகிவிட்டன. எனவே தினமும் வெளியாகும் அதிகப்படியான கழிவுநீரை அகற்றும் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி குடிநீரில் கலக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குடிநீர் கழிவுநீர் கலப்பதால் அதைக் குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுகிறது என்பதே சுகாதாரத் துறையினரின் கருத்தாகும். அதன்படி தினமும் சுமார் 5 கோடி லிட்டர் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்பட முடியாமல் தேங்குவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் கே.சக்திவேலிடம் கேட்டபோது, மதுரையில் உள்ள பழைய கழிவுநீரேற்றும் மையங்களில் உள்ள மோட்டார்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படவுள்ளன. ரூ.131 கோடி மதிப்பீட்டில் இவை புதுப்பிக்கப்பட்டு 30.6.2011-ல் செயல்படத் தொடங்கும் என்றார்.
சாணம்-எண்ணெய்யால் பாதிப்பு: மதுரையில் கழிவுநீர் குடிநீரில் கலப்பதற்கும், நோய் தொற்று கிருமிகள் பரவுவதற்கும் மாடு உள்ளிட்டவையின் சாணம் மற்றும் ஹோட்டல்களில் இருந்து வெளியேறும் எண்ணெய் கலந்த கழிவுநீரும் முக்கிய காரணமாக இருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
அதாவது மதுரையில் செல்லூர், பெரியார் பஸ் நிலையம், தெற்குமாசி வீதி, வடக்குமாசி வீதி, ஜெய்ஹிந்த்புரம், பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 2 டன் சாணம் கழிவுநீர்க் கால்வாயில் கலப்பது தெரியவந்துள்ளது.
இந்த சாணம் கழிவுநீர்க் கால்வாயை அடைத்து நிற்பதால் கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல முடியாமல் தேங்குவதாகவும், இவ்வாறு தேங்கும் கழிவுநீரே குடிநீர்க் குழாய் கசிவுப் பகுதி மூலம் குடிநீரில் கலப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, மாநகரில் 125 பெரிய ஹோட்டல்கள் (சாப்பாடு) உள்ளன. ஆயிரக்கணக்கான சிறிய ஹோட்டல் உள்ளன. இவற்றிலிருந்து எண்ணெய் கலந்த சுமார் 1 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வரும் கழிவுநீரில் இருக்கும் நுண்கிருமிகளை அழிப்பதில் சிரமம் இருப்பதாகவும், இதன் காரணமாகவே ஹோட்டல் கழிவுநீரில் இருந்து வரும் நுண்கிருமிகளால் தொற்றுநோய் அதிகம் பரவுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் மதுரையில் சுகாதார மேம்பாடு என்பது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு மதுரை நகரில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பரவி வரும் மலேரியா மற்றும் டைபாய்டு நோய் பாதிப்பைத் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...