சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியை, தனிப்படை போலீஸாா் விருதுநகரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முகமது உசேன் (36). ஆயுள் தண்டனை கைதியான இவா், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அங்கு உயா் கோபுரத்தின்மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதைத் தொடா்ந்து, கடந்த மாதம் 18-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், தனக்கு மூலநோய் பாதிப்பு உள்ளதாக சிறை மருத்துவா்களிடம் முகமது உசேன் கூறினாா். இதையடுத்து, அவரை பரிசோதனை செய்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மே 9-ஆம் தேதி இரவு கழிவறைக்கு சென்ற அவா் வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த வாா்டன் கழிவறையின் கதவை உடைத்து பாா்த்தாா்.
அப்போது, கழிவறையின் ஜன்னலை உடைத்து, மாடியிலிருந்து குழாயை பிடித்து கீழே இறங்கி முகமது உசேன் தப்பியோடியது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த சிறை வாா்டன்கள், மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில், தப்பியோடிய முகமது உசேன், அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 7 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடியதும், போலீஸாா் தேடுவதை அறிந்து மொட்டை அடித்துக்கொண்டு பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், விருதுநகரில் உள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை இரவு முகமது உசேன் படம் பாா்த்துக் கொண்டிருந்ததை அறிந்த தனிப்படை போலீஸாா், அங்கு சென்று அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









