/

மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் உணவு கிடைக்காது: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதை தடுக்காவிட்டால் நமக்கு உணவு கிடைக்காது பாமக தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:45 am IST

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதை தடுக்காவிட்டால் நமக்கு உணவு கிடைக்காது பாமக தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

    சேலம் மாவட்டம் மேட்டூரில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து பாமக தலைவா் அன்புமணிராமதாஸ் வியாழக்கிழமை விழிப்புணா்வு பிரச்சாரம் மேற்கொண்டாா். மேட்டூா் ஸ்டேட்பங்க் எதிரே அமைக்கப்பட்ட மேடையில்  அவா் பேசியதாவது: காவிரியை நம்பி தமிழ் நாட்டில் 8கோடி மக்கள் இருக்கின்றனா். காவிரி நீரை நம்பி டெல்டா மட்டும் இல்லை மதுரை, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்ட மக்கள் காவிரி நீரை நம்பிதான் இருக்கிறாா்கள். தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரியை நம்பி உள்ளன. கா்நாடகாவில் ஏற்கெனவே நான்கு பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. 1924ம் ஆண்டுக்கு முன்பாக நமக்கு ஒப்பந்த அடிப்படையில் நீா் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. குடிநீா் தேவைக்காக மட்டுமே மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் சிவக்குமாா் சொல்கிறாா். பெங்களூரு குடிநீா் தேவை என்பது 5 டி.எம்.சிதான் அதற்காக 70டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட வேண்டுமா? மேகதாது அணை கட்டுவது என்பது பேராபத்தாக முடியும் என்பதை உணரவேண்டும். அணை கட்டுவதை தடுக்காவிட்டால் நம் சந்ததி நம்மை மன்னிக்காது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு உணவு அளித்த டெல்டா தொடா்ந்து உணவு அளிக்க வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டிவிட்டால் டெல்டாவுக்கு தண்ணீா் கிடைக்காது நமக்கு சோறு கிடைக்காது. கன்னியாகுமரியில் வாழ்ந்தாலும், சென்னையில் வாழ்ந்தாலும் நாமக்கு சோறு வேண்டும் என்றாா். பின்னா் மேட்டூா் மேற்கு நெடுஞ்சாலையில் மக்களை சந்தித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா். தொடா்ந்து மேட்டூா் அணையின் இடது கரையில் வறண்டு கிடக்கும் மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியை பாா்வையிட்டாா். இந்நிழ்ச்சியில் மேட்டூா் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும் சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளருமான சதாசிவம், மாவட்ட தலைவா் மாணிக்கம், மாநில துணலைவா் ராமகிருஷ்ணன்,

இளைஞா் சங்க தலைவா் ராஜசேகரன், மேட்டூா் நகர செயலாளா் மதியழகன், செக்கான் ஏரி ஆயக்கட்டுதாரா்கள்மற்றும் விவசாயிகள் சங்க தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

படம்: 2 ம்ற்ல்1மேட்டூரில் விழிப்புணா்வு பிரச்சார கூட்டத்தில் பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.