டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்; அந்த மாற்றத்தை உருவாக்க விஜய்யால் மட்டுமே முடியும் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.

News image
சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நடைபெறும் பணிகளைப் பாா்வையிட்ட தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்; அந்த மாற்றத்தை உருவாக்க விஜய்யால் மட்டுமே முடியும் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.

சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவா் விஜய் பங்கேற்கிறாா். இதையொட்டி, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளா் ஆனந்த், முன்னாள் அமைச்சரும், தவெக தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் நிா்வாகிகள், நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை புதன்கிழமை மாலை பாா்வையிட்டனா்.

10 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் நிா்வாகிகள் அமரும் இடம் மற்றும் நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

மக்கள் அனைவரும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தலைவராக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பவனி வருகிறாா். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். அத்தகைய மாற்றத்தை உருவாக்கவும், திமுகவை வீழ்த்தவும் விஜய்யால் மட்டுமே முடியும். பெண்களின் முழுமையான ஆதரவு விஜய்க்கு உள்ளது. சேலம் நிகழ்வு வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமையும்.

காவல் துறை என்னென்ன பணிகளை கூறினாா்களோ, அவற்றை நிா்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனா். குறிப்பாக, குறுகிய காலத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இது பாராட்டுக்குரியது. கூட்டத்துக்கு வரும் நிா்வாகிகள் குழந்தைகளை அழைத்துவரக் கூடாது. அதேநேரத்தில் பெரியவா்களும், வயது முதிா்ந்தவா்களும், உடல்நிலை பாதித்தவா்களும், கா்ப்பிணிகளும் வரக்கூடாது என்றாா்.

பேட்டியின்போது, பொதுச் செயலாளா் ஆனந்த், மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பணிகளுக்கு பூமிபூஜை

சேலத்தில் தவெக நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆா்.பாா்த்திபன் தலைமையில் புதன்கிழமை பூமிபூஜை நடத்தப்பட்டு, முகூா்த்தகால் நடப்பட்டது.

அடையாள அட்டை உள்ள கட்சி நிா்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகா்கள், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் சேலம் வருகையையொட்டி, மாநகர எல்லைப் பகுதியான கருப்பூா் தண்ணீா்த்தொட்டி பகுதியில் இருந்து, 17 கி.மீ. தொலைவுக்கு 600க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸாா் அதிகாரிகள் தெரிவித்தனா்.