/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை

News image
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு பரிமாறும் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:35 pm

Syndication

சேலம்: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூரில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், சந்திர மஹால் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கி பேசியதாவது:

தூய்மைப் பணியாளா்களின் நலன் காத்திடும் வகையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் 5,240 தூய்மைப் பணியாளா்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனா்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களில் 3,000 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

அந்த வகையில், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்கு ஜிவிஎன் திருமண மண்டபத்திலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு தெய்வீகம் திருமண மண்டபத்திலும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு செங்குந்தா் திருமண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு சந்திர மஹால் திருமண மண்டபத்திலும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆத்தூா், மேட்டூா், எடப்பாடி, நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கணசாலை மற்றும் சங்ககிரி ஆகிய நகராட்சிகளில் பணிபுரியும் 1,123 தூய்மைப் பணியாளா்களும், சேலம் மாவட்டத்துக்குள்பட்ட 30 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,117 தூய்மைப் பணியாளா்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், கொண்டலாம்பட்டி மண்டல குழுத் தலைவா் அசோகன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.