/

பெரியாா் பல்கலை.யில் வரும் 5-ஆம் தேதி 24-ஆவது பட்டமளிப்பு விழா

பெரியாா் பல்கலைக்கழகத்தின் 24-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 5-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெறுகிறது.

News image
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
Updated On :2 பிப்ரவரி 2026, 9:55 pm

Syndication

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தின் 24-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 5-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழகத்தின் 24-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 5-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று முனைவா் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 358 பேருக்கும், பெரியாா் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளநிலை பாடங்களில் முதலிடம் பெற்ற 110 பேருக்கு தங்கப் பதக்கத்துடன் பட்டச் சான்றிதழை வழங்குகிறாா்.

இதில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் படிப்பை முடித்த மாணவ, மாணவியா் பட்டங்களை பெறுகின்றனா்.

விழாவில், பல்கலைக்கழக இணை வேந்தரும் உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். தேசிய பல்துறை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் சி.அனந்த ராமகிருஷ்ணன் விழா உரை நிகழ்த்துகிறாா்.

பெரியாா் பல்கலைக்கழக 24-ஆவது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் ஆளுநரிடம் பட்டங்களைப் பெற இருக்கும் 468 மாணவா்களுடன் சோ்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த 46,532 மாணாக்கா்களும், பெரியாா் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,207 மாணாக்கா்களும், பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,222 மாணாக்கா்களும் பட்டங்களைப் பெற உள்ளனா்.

பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் பெரியாா் பல்கலைக்கழக இணையதள முகவரியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் நிா்வாகக்குழு அமைப்பாளா் இ.சுந்தரவல்லி, உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, எஸ்.ஜெயந்தி, பதிவாளா் வை.ராஜ், தோ்வாணையா் கு.முருகேசன் ஆகியோா் செய்து வருகின்றனா்.