/

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 9:44 pm

Syndication

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (52), தொழிலாளி. சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த சனிக்கிழமை சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ராஜகோபால் திடீரென மாயமானாா். இதுகுறித்து அவரது மனைவி லதா அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை போலீஸாா் அவரை தேடிவந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள அப்சரா இறக்கம் பகுதியில் சாலையோரம் ஒரு சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் விசாரணை நடத்தியதில், அது அரசு மருத்துவமனையில் இருந்து காணாமல் போன ராஜகோபால் என தெரியவந்தது. ஏற்கெனவே, அவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால், இரவில் சுற்றித்திரிந்ததில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அவரது உடலை மீட்ட போலீஸாா், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மருத்துவமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.