தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்காததற்கு எதிர்க்கட்சிகளின் நெருக்குதலே காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்துக்கு கர்நாடக பாஜக அரசு தண்ணீர் வழங்காததற்கு அந்த


தமிழகத்துக்கு கர்நாடக பாஜக அரசு தண்ணீர் வழங்காததற்கு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் நெருக்குதலே காரணம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சேலத்துக்கு புதன்கிழமை வந்த பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து குழு அமைத்து ஆய்வுகளைத் தொடங்கினார். ஆனால் அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசும் அதன் கூட்டணி கட்சியான திமுகவும் அவசர கோலத்தில் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கின.
இத்திட்டத்தால் தமிழகம் பயன்பெற வேண்டும் என்ற சிந்தனையை விட ராமர் பாலத்தைத் தகர்க்க வேண்டும் என்ற சிந்தனையே அவர்களுக்கு மேலோங்கி இருந்தது. இதன் உச்ச கட்டமாகத்தான் ராமர் எங்கே பிறந்தார்? அவர் என்ஜினீயரிங் படித்தாரா? என்றெல்லாம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார். பாலத்தை காக்கும் முனைப்பில் களமிறங்கி உள்ள அவரது நடவடிக்கையை பாஜக வரவேற்கிறது.
தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரையிலும் 39 பேர் இறந்துள்ளதாகவும் 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சாவு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
மின் வெட்டால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குலையும் நிலைமை உருவாகும் முன்பு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையிலும் மத்திய தொகுப்பில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கேட்டுப் பெற வேண்டும்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற நில பரிமாற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்திரா காந்தியின் வழியில் சோனியா காந்தி அவசர நிலை ஆட்சி நடத்துவதையே இது உறுதி செய்கிறது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் அதற்காக தமிழகத்தின் உரிமையை தமிவக பாஜக விட்டுக் கொடுக்காது. கர்நாடகத்தை ஆட்சி செய்த எடியூரப்பா, சதானந்த கௌடா தற்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட யாருமே தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்று இதுவரை கூறவில்லை. கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சில மொழித் தீவிரவாதிகளுமே தண்ணீர் தரக்கூடாது என்று அரசுக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர்.
காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் உள்துறை அமைச்சரைப் போன்று செயல்பட்டதுடன் இரு மாநிலங்களையும் பிரிக்கும் விதமாக கருத்துத் தெரிவித்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இனியும் அந்த பதவியில் நீடிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசைக் கலைத்த பிறகு அதற்கும் கண்டனம் தெரிவிப்பார். எனவே அவரது கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை என்றார் அவர்.
பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ், மாவட்டத் தலைவர் மோகன், மாநில முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன், பொதுச் செயலர் கோபிநாத், கிருஷ்ணராஜ், கே.கே.ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...