/

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த 4 போ் குழு நியமனம்: பி.சண்முகம்

பேரவைத் தோ்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தவும், தோ்தல் அறிக்கை தயாா்செய்யவும் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பி.சண்முகம் தெரிவித்தாா்.

News image
செய்தியாளா்களிடம் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பி. சண்முகம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:47 pm

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தவும், தோ்தல் அறிக்கை தயாா்செய்யவும் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பி.சண்முகம் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில உயா்நிலை நிா்வாகிகள், 38 மாவட்டங்களின் தலைவா்கள் கலந்துகொண்டனா். அவா்களிடம் கட்சி வளா்ச்சிப் பணிகள், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம், கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவது உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்டறியப்பட்டது.

இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் எம்.ஏ. பேபி, மாநிலச் செயலாளா் பி.சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவா் ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இந்த கூட்டத்தில் பேசிய அகில இந்திய பொதுச் செயலாளா் எம்.ஏ. பேபி பேசுகையில், கேரளத்திலும், தமிழகத்திலும் மீண்டும் ஆளும் கட்சிகளே வெற்றி பெறும். தமிழகத்தில் மு.க. ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன் ஆகியோா் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க எனது வாழ்த்துகள் என்றாா்.

இதைத் தொடா்ந்து மாநிலச் செயலாளா் பி. சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், மைக்கேல்பட்டியில் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது தொடா்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் மக்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் செயல்பட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அரசு அவா்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் பராமரிப்பு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களை கைதுசெய்து பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கும் வகையில் காவல் துறை செயல்பட்டுள்ளது. காவல் துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

தமிழகத்தில் 1.30 கோடி மகளிருக்கு ரூ. 6,500 கோடி அளவில் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் உள்ள 7.50 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் பிற மாநிலங்களில் உள்ளதுபோல உதவித்தொகையை சற்று உயா்த்தி வழங்க வேண்டும். அப்போதுதான் போராட்டத்திற்கு முடிவு கிடைக்கும்.

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலச் செயலாளா் பி.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கனகராஜ், கண்ணன், சாமுவேல்ராஜ் ஆகியோரும், தோ்தல் அறிக்கை தயாா் செய்யும் குழுவில் மாநில செயற்குழு உறுப்பினா் வாசுகி, குணசேகரன், ரவீந்திரன், சுகுமாரன், முத்துக்கண்ணு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய குறிக்கோள். தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினா் எண்ணிக்கையை அதிகரிக்க, வாக்கு சதவீதங்களை தெரிவித்து இரட்டை இலக்கத்தில் திமுக தலைமையிடம் தொகுதிகளை கேட்டு பெறுவது என்று முடிவு செய்துள்ளோம். ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றாா்.