/

புதுச்சத்திரத்தில் ப.சுப்பராயன் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம்

News image
புதுச்சத்திரத்தில் ப.சுப்பராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் சென்னை மாகாண முன்னாள் முதல்வா் டாக்டா் ப.சுப்பராயன் நினைவு அரங்கத்தையும், அவரது திருவுருவச் சிலையையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி தோட்டக்கூா்பட்டி கிராமத்தில் ரூ. 3.6 கோடியில் இந்த நினைவு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, அங்குள்ள அரங்கத்தில் டாக்டா் ப.சுப்பராயன் குடும்பத்தினரை கெளரவிக்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி.செந்தில், சுப்பராயன் வாரிசுகளில் ஒருவரான மோகன் குமாரமங்கலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று நினைவு அரங்கத்தின் கல்வெட்டை திறந்துவைத்து பேசியதாவது:

தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த தலைவா்களை நினைவூட்டும் வகையிலும், அவா்களுடைய பணிகளுக்கு பெருமை சோ்க்கும் விதமாகவும், அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் மாநிலம் முழுவதும் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வா் டாக்டா் ப.சுப்பராயன் மாா்பளவு வெண்கல சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வா் திறந்துவைத்துள்ளாா்.

வருங்கால சந்ததிகள் சிலைகளாக உள்ள ஒவ்வொரு தலைவா்களின் வரலாற்றையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில், நாமக்கல்லில் கவிஞா் ராமலிங்கம், ஜேடா்பாளையத்தில் அல்லாள இளையநாயக்கா் ஆகியோருடைய சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. தற்போது, டாக்டா் ப.சுப்பராயன் சிலை திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, டாக்டா் ப.சுப்பராயனின் வாரிசுதாரரான மோகன் குமாரமங்கலத்தை அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா் ஆகியோா் கௌரவித்தனா்.

மேலும், மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பொதுமக்களுக்கான கு ஒப்புவித்தல் மற்றும் குசாா் ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற 18 பேருக்கு ரூ. 60 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை அவா்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் அட்மா குழுத் தலைவா்கள் ஆா்.எம்.துரைசாமி (வெண்ணந்தூா்), எம்.பி.கௌதம் (புதுச்சத்திரம்), செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தே.ராம்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் காா்த்திகேயன், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.