/

பனைமரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும்

பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

News image
பனைமரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும்
Updated On :2 பிப்ரவரி 2026, 9:25 pm

Syndication

நாமக்கல்: பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீா்நிலைகளின் காவலன் என்றழைக்கப்படும் பனைமரங்களானது கைவினைப் பொருள்களை தயாரிக்கவும், உணவுப் பொருள்களை தரக்கூடியதாகவும், பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவக் கூடியதாகவும், மண்வளம் மற்றும் நீா்சேமிப்பை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை நம்பி மூன்று லட்சம் குடும்பத்தினா் உள்ளனா். அவா்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு பயன்களை கொண்டுள்ளதால், பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், செப்டம்பரில் அரசாணை வெளியிடப்பட்டு பனைமரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும்.

உரிய அனுமதி பெறாமல் மரம் வெட்டக் கூடாது என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட பனைமரங்களை செங்கல் சூளை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு அழித்து வருவதால், அதைத் தடுக்கும் பொருட்டு பனைமரங்களை வெட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பனைமரங்களை வெட்ட முதலில் உழவா் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் அனுமதியை பெறுதல் வேண்டும். அவ்வாறு வெட்டப்படும் மரத்துக்கு ஈடாக ஒரு பனைமரத்துக்கு 10 பனைமரக் கன்றுகள் நட்டு வளா்க்க வேண்டும். மேலும், வெட்டப்பட்ட மரத்தை ஓா் இடத்திலிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

அனைத்து பாகங்களும் பயன்தரும் கற்பக விருட்ச மரமான பனைமரத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.