/

கடும் வறட்சி: தண்ணீரின்றி பட்டுப்போன தென்னை மரங்கள் 

நாமக்கல் மாவட்டம்,   நாமகிரிப்பேட்டை  பகுதியில்  போதிய   மழையில்லாத  காரணத்தினால் தண்ணீர் பற்றாக்குறை

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:18 am

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

நாமக்கல் மாவட்டம்,   நாமகிரிப்பேட்டை  பகுதியில்  போதிய   மழையில்லாத  காரணத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் வறட்சி நிலவுகிறது.  இதனால் அப் பகுதியில் பெரும்பாலான தென்னை மரங்கள் காய்ந்து பட்டுப்போன நிலையில் உள்ளன. இதனால், அப் பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர். 
நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம்  அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை   -  சேந்தமங்கலம் வட்டாரப் பகுதியில்  ஏராளமான  தென்னை விவசாயிகள் உள்ளனர்.  குறிப்பாக,  நாமகிரிப்பேட்டை,  ராசிபுரம்,  வெண்ணந்தூர்  வட்டாரங்களில் மட்டும் சுமார் 1,200 ஹெக்டேர் பரப்பில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும்,  மரவள்ளிக்கிழங்கு,   மஞ்சள், சின்ன வெங்காயம், வாழை,  நிலக்கடலை போன்றவை  இப் பகுதியில் அதிகம்
பயிரிடப்படுகின்றன.  
ஆனால், ஆண்டுக்கு ஆண்டு மழைக் குறைவால் இப் பகுதி விவசாயிகள் தங்களது வேளாண் பரப்பைக் குறைத்துக் கொண்டே வருகின்றனர்.  தென்னை, பாக்கு,  மஞ்சள், வாழை  போன்றவை அதிகம்  சாகுபடி செய்யப்பட்டு வந்த இப் பகுதியில், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் இப் பயிர்கள் பயிரிடுவது படிப்படியாகக் குறைந்து
வருகிறது.
தற்போது நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரத்து 200 ஹெக்டேரில் மரவள்ளி,   950  ஹெக்டேரில் மஞ்சள்,  350  ஹெக்டேரில் வாழை  உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.  இது சில ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்ட  பரப்பளவைவிடக் குறைவாகும்.
நிவாரணம் வழக்க வேண்டும்...
பல  இடங்களில் பயிர்கள் மட்டுமின்றி,  தென்னை மரங்களும் தண்ணீரின்றி தோப்புகளில் பட்டுப்போன நிலையில் காய்ந்து காணப்படுகின்றன.   குறிப்பாக,  நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதியான பச்சுடையாம்பாளையம்,   குள்ளாண்டிக்காடு,  ஜேடர்பாளையம்,  அரியாகவுண்டம்பட்டி,  ஈச்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி,  கல்குறிச்சி,  பேளுக்குறிச்சி போன்ற பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டு,  ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் தோப்புகளில் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.   இது அப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் விவசாயிகள் நிலையைக் கருத்தில் கொண்டு காய்ந்து போன தென்னை மரங்கள், பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட அரசு முன்வர வேண்டும்.  வேளாண் கடன், பயிர்க் கடன், நகைக் கடன்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதியில் தண்ணீர் இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,  வேறு பகுதியில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பாக,  தண்ணீர் வசதி உள்ள உறவினர்கள்,  நண்பர்கள் தோட்டத்தில் இருந்து பயிருக்குத் தண்ணீர் தேவையான விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது தடை விதிக்கப்படுகிறது.  இதனை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை முறையான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயப் பயிரைப் பாதுகாத்திட வேறு பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லவதை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்
அப் பகுதி விவசாயிகள்.

மழை குறைவு
கடந்த  இரு ஆண்டுகளாக  ராசிபுரம், சேந்தமங்கலம்,  நாமகிரிப்பேட்டை,  வெண்ணந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் மழை குறைவால் மரவள்ளி- தென்னை வளர்ப்பு விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நடப்பு ஆண்டில் குறிப்பாக, நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதியில் மழை அளவு குறைந்த போனதாலும்,  நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போனதாலும் விவசாயத்துக்கும்,  கால்நடை வளர்ப்புக்கும் தண்ணீரின்றி கடும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.
இதனால் அப் பகுதியில் விவசாயப் பயிர்கள்,  மரங்கள் போன்றவற்றின் விளைச்சல் பாதித்து,   பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒகேனக்கல் - துறையூர் திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை
தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களின் நீராதாரத்தைக் கருத்தில் கொண்டு, 1987 -ஆம் ஆண்டு ஒகேனக்கல் - துறையூர் நீர்வழித் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.  தற்போது ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இத் திட்டத்தை அரசு நிறைவேற்றினால்,  சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில்  பல்வேறு பகுதிகள் பலனடையும் என்பதால்,  அதனை உடனே அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவரும்,  நவீன நீர்வழிச்சாலை பேரியக்க  உறுப்பினருமான பி.பரமசிவம் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும்,  தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கவும், புதிய நீர்வழிச்சாலை ஏற்படுத்திடவும் கோரிக்கை வைத்து ஜூலை 5-இல் கோவையில் விவசாயிகள்  பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என்றார்.
இதுகுறித்து ஈச்சம்பட்டி  விவசாயி முத்துசாமி கூறுகையில்,    கடந்த 20 ஆண்டுகளாக தென்னை மரங்களை வளர்த்து வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் வற்றி உள்ளது. விலைக்கு வாங்கியும்  கட்டுப்படியாகவில்லை என்றார்.  கல்குறிச்சி விவசாயி குணசேகரன் தெரிவிக்கையில்,  கடந்த 40 ஆண்டு காலமாக விவசாயம் செய்துவருகிறேன்.  ஆனால் என்றும்  இல்லாத அளவு  இந்த ஆண்டு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  விலைக்கு வாங்கி தண்ணீரைப் பயன்படுத்தியும் மரவள்ளிக்கிழங்கு பயிரைக் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.  இதனால் தென்னை,  மரவள்ளிக்கிழங்கு, கோலியாஸ் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.