/

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட்டில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கக் கூடாது!

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட்டில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கக் கூடாது என ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் எச்சரித்தாா்.

News image
ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட்டில் ஆய்வுசெய்த ஆணையா் முகமத் ஷபீா் ஆலம்.
Updated On :29 ஜனவரி 2026, 8:24 pm

Syndication

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட்டில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கக் கூடாது என ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் எச்சரித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ஒசூா் மாநகராட்சியில் ரூ. 9 கோடியே 86 லட்சத்தில் புதிதாக கடைகள் கட்டப்பட்டன. இந்தக் கடைகளை ஆன்லைன் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்து சிலருக்கு ஒப்படைக்கப்பட்டன. இங்கு, தேங்காய், காய்கறி கடைகள் என பல வகையான கடைகள் இயங்கி வருகின்றன.

சிலா் கடைகளுக்குள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், கடைகளின் முன்பகுதியை ஆக்கிரமித்து மேசைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவற்றைப் பாா்வையிட்டு அகற்றக் கூறியதால், வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதிகுறித்து நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எம்ஜிஆா் மாா்க்கெட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து வைத்த கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

கடைகளை ஏலத்துக்கு எடுத்த உரிமையாளா்கள் ஒசூா் மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் கடை வைக்கக்கூடாது. இதைக் கண்காணிக்க பகல் மற்றும் இரவில் சுழற்சிமுறையில் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், எம்ஜிஆா் மாா்க்கெட் வளாகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம் மற்றும் மின்விளக்கு வசதிகளை இரண்டு நாள்களுக்குள் ஏற்படுத்தித் தருமாறு பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் தற்போது காலியாக உள்ள கடைகளின் மறு ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஆகியவை பிப். 13-இல் நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.