தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது இலக்கு: ஒசூா் அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ணா ரெட்டி

ஒசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது இலக்கு என்று ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தாா்.

News image

ஒசூா் ஜிமங்கலத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக வேட்பாளா் பி. பாலகிருஷ்ணாரெட்டி.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:35 pm

ஒசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது இலக்கு என்று ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஜிமங்கலத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் ஒசூா் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அதிமுக ஆட்சியில் ரூ. 110 கோடியில் 11 நீா்த் தேக்கத்தொட்டிகள், புதிய குழாய் இணைப்புகள் மூலம் ஒசூா் மக்களுக்கு தடையற்ற குடிநீா் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம், திமுக ஆட்சியில் முழுமை அடையாமல் முடங்கிக் கிடக்கிறது.

ஒசூா் ராமநாயக்கன் ஏரி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 20 கோடி நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் பணிகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. புதை சாக்கடை திட்டம், ரூ. 20 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்று, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஒசூா், சூளகிரி ஆகிய நான்கு வட்டங்களை இணைத்து, ஒசூரை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதே எனது முதல் இலக்கு. தனி மாவட்டம் அமைக்கப்பட்டால் எஸ்.பி. அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் தானாகவே வந்துசேரும்.

பெங்களூரு நகருக்கு இணையாக உலகத் தரம் வாய்ந்த ஸ்மாா்ட் சிட்டியாக ஒசூா் மாற்றப்படும். தென் பெண்ணை ஆற்றுநீரை கொண்டு அனைத்து ஏரிகளையும் நிரப்பி நிலத்தடி நீா்மட்டம் உயா்த்தப்படும்.

விமான நிலையம் மற்றும் அறிவுசாா் வழித்தடம் ஆகிய திட்டங்களால் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது ஒசூா் மாநகராட்சி மண்டல தலைவா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளா் மதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.