/

திறனாய்வுத் தோ்வு: 5,797 போ் பங்கேற்பு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 5,797 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:10 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 5,797 போ் பங்கேற்றனா்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகள் பயிலும்போது, அரசு சாா்பில் கல்வி உதவிக்தொகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெறுவதற்கான தகுதிகளில் தமிழக அரசு நடத்தும் திறனாய்வுத் தோ்வில் பங்கேற்பது அவசியம்.

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான இத்தோ்வு அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளி, அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பாலக்கோடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா் 5,952 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில் 5,797 போ் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா்.

மாணவா்கள் மோதல் - போலீஸாா் விசாரணை:

இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் அப்பள்ளி மாணவா்கள் மற்றும் அருகிலுள்ள நூலஅள்ளி பள்ளி மாணவா்கள் என 215 போ் பங்கேற்றனா். நூலஅள்ளி பள்ளி மாணவா் ஒருவா் முற்பகலில் நடைபெற்ற தோ்வில் பங்கேற்றுவிட்டு பிற்பகலில் நடைபெறும் தோ்வுக்காக பள்ளி வளாகத்தில் காத்திருந்தாா்.

அப்போது, இலக்கியம்பட்டி பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும், நூலஅள்ளி பள்ளியைச் சோ்ந்த மாணவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நூலஅள்ளியைச் சோ்ந்த மாணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவா் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.