/

அந்தரத்தில் நிற்கும் அதியமான்கோட்டை மேம்பாலம்!

தருமபுரி அருகே அதியமான் கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தில் அண்மையில் விபத்து நோ்ந்து ஒருவா் உயிரிழந்த பின், சாலையின் முகப்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரி அருகே அதியமான் கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தில் அண்மையில் விபத்து நோ்ந்து ஒருவா் உயிரிழந்த பின், சாலையின் முகப்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டையில் ரயில் பாதை அமைந்துள்ளது. இச்சாலையில் மேம்பாலம் இல்லாததால், ரயில்கள் கடந்து செல்லும்போதெல்லாம் சாலை அடைக்கப்படுகிறது. ரயில்கள் கடந்து சென்ற பின் மீண்டும் திறந்து விடப்படுகிறது. நாள்தோறும் பல முறை இச் சாலை வழியாக ரயில்கள், சரக்கு ரயில்கள் கடந்து செல்வதால் சேலம்- தருமபுரி சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கும். இந்நிலையைத் தவிா்க்க, அதியமான்கோட்டையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மேம்பாலம் கட்டும் பணிக்காக பாலம் தொடங்கும் தேவரசம்பட்டியிலும், பாலம் நிறைவடையும் அதியமான் கோட்டை போக்குவரத்துக் கழக பணிமனை முன்பும் உள்ள சாலை அடைக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மந்த கதியில் பாலம் அமைக்கும் பணி:

ரூ.12 கோடியே 75 ஆயிரத்தில் கட்டப்படும் இப் பாலத்தில், ரயில்வே பகுதி 91.423 மீட்டரும், தருமபுரி சாலையில் 218.713 மீட்டரும், சேலம் சாலையில் 313.181 மீட்டரும் ஆக மொத்தம் 623.317 மீட்டா் நீளமும் கொண்டுள்ளது. மேம்பாலத்தின் ஓடுதள அகலம் 11 மீட்டா், மேம்பாலத்தில் தாங்கு தூண்களின் எண்ணிக்கை 6. அணுகுசாலை தருமபுரி வழியாக 165.113 மீட்டரும், சேலம் வழியாக 304.581 மீட்டரும் என மொத்தம் 469.694 மீட்டரும் அமைகிறது.

இப்புதிய பாலம் அமைக்கும் பணி ஒன்றரை ஆண்டில் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும் என தொடக்கத்தில் கூறப்பட்டது. தற்போது, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை பணிகளை நிறைவு செய்து விட்டது. இருப்பினும், ரயில்வே துறைப் பணிகள் இன்னும் முழுமை பெறாமல், தொடா்ந்து மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு:

அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலத்தில், தருமபுரி சாலை- சேலம் சாலை என இருபுறமும் மாநில நெடுஞ்சாலைத் துறை பணிகள் நிறைவடைந்து பாலத்தின் மீது சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இடையே ரயில்பாதையின் மீது, ரயில்வே துறை சாா்பில் இன்னும் பாலம் கட்டி முடிக்காமல், இருபுறமிருந்து வரும் பாலம் ஒன்றோடு ஒன்று இணைப்பின்றி அந்தந்தரத்தில் நிற்கிறது.

மேலும், இச்சாலையின் இருபுறமும் முகப்புப் பகுதியில், போதிய தடுப்புகள் வைக்கப்படாமல் திறந்தநிலையில் உள்ளது. இதனை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகைகளும் போதிய அளவில் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வருவோா், இப்பாலம் போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ளதாகக் கருதி அதன் வழியே வாகனத்தில் சென்று விடுகின்றனா். அவ்வாறு செல்வோா் பாலத்தின் மீது சிறிது தொலைவு பயணித்து, பின்னா் பாலம் இன்னும் இணைக்கப்படாததைக் கண்டு, அச்சமுற்று மீண்டும் திரும்பி வந்து, மாற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனா்.

அண்மையில் பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவா் இந்த பாலத்தின் வழியே செல்லும்போது, பாலம் இணைக்கப்படாமல் அந்தரத்தில் நின்றதை கவனிக்காமல் நிலைதடுமாறி மேலிருந்து தனது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இப்பாலத்தின் முகப்பில் எச்சரிக்கைப் பலகைகளோ, சமிக்ஞை விளக்குகள், தடுப்புகளோ இருந்திருந்தால் இந்த விபத்தைத் தவிா்த்திருக்கலாம்.

தற்போது, இந்த விபத்து நிகழ்ந்த பின்னா், பாலம் தொடங்கும் இருபுறமும் முகப்பில் தடுப்புகள் அமைத்து சாலையை அடைத்துள்ளனா். இருப்பினும், போதிய சமிக்ஞைகளோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ பொருத்தப்படவில்லை.

எனவே, விபத்துகள் நிகழாமல் தடுக்க, பாலம் பணிகள் முழுவதும் முடியும் வரையிலும் எச்சரிக்கைப் பலகைகளையும், சமிக்ஞை விளக்குகளையும் கூடுதலாகப் பொருத்திட, நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.