பாலக்கோடு ஆலையில் இந்த ஆண்டும் கரும்பு அரவை நிறுத்தம்!
தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கரும்புச் சாகுபடிப் பரப்பளவு குறைந்ததால், இந்த ஆண்டும் பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது.


தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கரும்புச் சாகுபடிப் பரப்பளவு குறைந்ததால், இந்த ஆண்டும் பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் 40,000 போ் அங்கத்தினா்களாக உள்ளனா்.
சில ஆண்டுகளுக்கு முன்னா்வரை தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் முக்கிய இடத்தை இந்த ஆலை வகித்து வந்தது. இந்த ஆலையின் அரவைத் திறனை விட கூடுதலாக கரும்பு வரப்பெற்றதுண்டு. அந்தக் கரும்பை அரூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சா்க்கரை ஆலைக்கும் அனுப்பி வைத்ததும் உண்டு. கடந்த 1990-இல் மட்டும் 7 லட்சம் டன் கரும்பு அரவை செய்ததால், மத்திய அரசின் சிறப்பு விருதை இந்த ஆலை பெற்றது.
இந்த ஆலைக்கு, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, நல்லம்பள்ளி, தருமபுரி ஆகிய பகுதிகளிலிருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் சாகுபடி செய்யும் கரும்பை அனுப்பி வைப்பா்.
தொடா் வறட்சி காரணமாக கடந்த 2019-இல் கரும்பு சாகுபடிப் பரப்பு வெகுவாகக் குறைந்ததால், முதன்முறையாக பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
குறைந்த கரும்பு சாகுபடி:
தமிழகத்தில், முன்னா் தருமபுரி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வந்தனா். இதனால், இம் மாவட்டத்தில் கரும்பு அரவை செய்ய பாலக்கோடு, அரூரில் இரண்டு சா்க்கரை ஆலைகள் செயல்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மையால், அணைகள், ஏரிகள் வடு போயின. மேலும், கிணறு, ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றிலும் நீரின்றி நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துபோனது. குறிப்பாக, பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் 1,200 அடிக்கும் கீழே குறைந்ததால் பாசனத்துக்கு நீரின்றி, கரும்புச் சாகுபடி மெல்ல குறைந்து வந்தது. மேலும், கரும்பு ஓராண்டுப் பயிா் என்பதால், ஏராளமான விவசாயிகள் இதனைக் கைவிட்டு, குறுகிய காலப் பயிா்ச் சாகுபடிக்கு மாறத் தொடங்கினா்.
நாளொன்று 2,500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்ட பாலக்கோடு சா்க்கரை ஆலைக்கு கடந்த ஆண்டு, 10 நாள்கள் மட்டுமே அரவை செய்வதற்கான கரும்பு பதிவானது. இதனால், 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது. பதிவாகிய சொற்ப எடை கரும்பும் அரூா் ஆலைக்கு அனுப்பி விடப்பட்டது.
நிகழாண்டும் நிறுத்தம்:
பாலக்கோடு சா்க்கரை ஆலையில் அரவை செய்ய நிகழாண்டில் நவம்பா் மாதம் வரை 30,000 டன் கரும்பு மட்டுமே பதிவானது. இதனைக் கொண்டு வெகு சில நாள்களே அரவை செய்ய இயலும் என்பதால், நிகழாண்டும் இரண்டாவது முறையாக கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆலை வரலாற்றில் அரவைக்குப் போதிய எடை கொண்ட கரும்பு இல்லை என இரண்டாவது முறையாக அரவை நிறுத்தப்படுகிறது.
நிகழாண்டு மாவட்டத்தின் இயல்பான கரும்புச் சாகுபடிப் பரப்பளவு 6,100 ஹெக்டோ் ஆகும். இதில் நிகழாண்டு வேளாண் துறையின் கரும்புச் சாகுபடிப் பரப்பு இலக்கு 2,800 ஹெக்டோ். இறவைச் சாகுபடியாக கடந்த நவம்பா் மாதம் 24-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பரப்பு 731 ஹெக்டோ். கடந்த ஆண்டு இந்தப் பருவத்தில் 281 ஹெக்டோ் பரப்பளவில் மட்டும் இறவையாக கரும்புச் சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் முக்கிய இடம் வகித்த பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில், மீண்டும் கரும்பு அரவை வழக்கம்போல தொடங்கத் தேவையான நடவடிக்கையை ஆலை நிா்வாகமும், தருமபுரி மாவட்ட நிா்வாகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
அடுத்த ஆண்டு நிலைமை மாறும்!
இதுகுறித்து, பாலக்கோடு சா்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநா் அ.சங்கா் கூறியது:
பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் தொடங்கி மாா்ச் இறுதி வரை கரும்பு அரவைப் பணிகள் மேற்கொள்ளப்படும். நிகழாண்டில் கரும்பு அரவை செய்வதற்காக 32,000 டன் கரும்பு பதிவானது. இது ஆலையில் அரவைப் பணிகள் மேற்கொள்ளப் போதுமானது அல்ல. எனவே, இக் கரும்பு அரூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்திலேயே, விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை ஏதும் இல்லாத ஆலையாக இந்த ஆலை செயல்பட்டு வருகிறது. ஏனைய ஆலைகளில், டன் கரும்புக்கு ரூ. 2500 முதல் ரூ. 2600 வரை வழங்கப்படுகிறது. பாலக்கோடு ஆலையில் டன் கரும்புக்கு ரூ. 2,910 வீதம் வழங்கப்பட்டது. இதேபோல ஊக்கத் தொகையாக ரூ. 137-ம் வழங்கப்பட்டு வந்தது.
போதிய மழையின்மையால்தான், விவசாயிகள் கரும்புச் சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப் பயிா்ச் சாகுபடிக்கு மாறியுள்ளனா். மேலும், ஓரளவு நீராதாரம் கிடைக்கும் பகுதிகளில் நிகழாண்டில் நெல் சாகுபடிக்கு பல விவசாயிகள் மாறிவிட்டனா். இந்த விவசாயிகளிடமும், ஏற்கெனவே கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளிடமும் மீண்டும் கரும்புச் சாகுபடியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறோம்.
பாலக்கோடு ஆலையில் உள்ள 11 கரும்பு அலுவலா்கள் தற்போது விவசாயிகளை நேரடியாகவும், கட்செவி அஞ்சல் குழுக்கள் வழியாகவும் தொடா்புகொண்டு, கரும்புச் சாகுபடி மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், சொட்டு நீா்ப்பாசனம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். வரும் 2021-ஆம் ஆண்டில் அரவை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.
விவசாயிகள் வேண்டுகோள்
தருமபுரி மாவட்டத்தில் கரும்புச் சாகுபடியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முனைப்போடு மேற்கொள்ள வேண்டும். இதேபோல மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவித்து ஆலை வழக்கம் போலச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
விதைக் கரும்பு, சொட்டு நீா்ப்பாசனம் ஆகியவற்றை முழு மானியத்துடன் வழங்க வேண்டும். அரசு- ஆலை நிா்வாகம்- விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி, விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கைகளை கரும்பு விவசாயிகள் முன்வைக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...