/

ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படுமா?

சுற்றுலாப் பயணிகளைக் கவர ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:52 am

ஆா்.ராதாகிருஷ்ணணன்

சுற்றுலாப் பயணிகளைக் கவர ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ளது ஒகேனக்கல் அருவி. இங்கு காவிரி ஆறு பல அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுவதால்,  இது தென்னிந்தியாவின் நயாகரா என அழைக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம்,  குடகு மலையில் சிற்றோடையாக உருவெடுத்து, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்தோடி, தமிழகத்தில் பிலிகுண்டுலுவில் நுழைந்து பின் ஒகேனக்கல்லில் உள்ள பாறைகளுக்கிடையே மோதி,  ஆர்ப்பரித்து அருவியாக மாறுகிறது காவிரி.  இங்கு பிரதான அருவி,  ஐந்தருவி, சினி அருவி என பல்வேறு அருவிகள் எழுப்பும் சப்தம் இனிமையாக ஒலிக்கும்.
எண்ணெய் குளியல், மீன் வறுவல்:
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளில் பலர் அருவியில் குளிப்பதற்கு முன்,  எண்ணெய்யால் மசாஜ் செய்து கொள்கின்றனர். இதற்கென, இங்கு பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் உள்ளனர்.  எண்ணெய் தேய்த்த பின் அருவியில் குளிக்கும் போது உடல் புத்துணர்வு பெறுகிறது.  அதேபோல, ஒகேனக்கல் அருவியில் மீன் வறுவல் கடைகளை ஆங்காங்கே காணலாம்.  அதேபோல கட்டணம் பெற்றுக்கொண்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அசைவ உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஏராளமான பெண் தொழிலாளர்கள்
உள்ளனர்.
மேம்பாடு தேவை: மிகப் பிரபலமான இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.  விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர, அருவியைத் தவிர வேறு அம்சங்கள் ஏதும் இல்லை.  மேலும்,  ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வனத் துறை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகின்றன.  அதேபோல,  வண்ண மீன் கண்காட்சியகத்தில் மீன்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால்,  அங்கு வரும் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர,  பூங்காக்களைப் பராமரித்து மீண்டும் பொலிவுபடுத்த வேண்டும்.  அருவியின் அழகைக் காண கண்காணிப்புக் கோபுரம் அமைக்க வேண்டும்.  சினி அருவியில் அனைவரும் சென்று நீராடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து சுற்றுலா மற்றும் கலாசார ஆர்வலர் ஆர்.பிரணவகுமார் கூறியது:  ஒகேனக்கல் அருவியின் நுழைவுப் பகுதியில் வனத் துறை பூங்கா இருந்தது. இப் பூங்காவில் மான், மலைப்பாம்பு, மயில் ஆகியவை இருந்தன.  இவற்றைக் காண ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால், தற்போது இப் பூங்கா முற்றிலும் முடங்கியுள்ளது. இதனை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல,  ஐந்தருவியை ஒரே இடத்தில் நின்று பார்வையிட உயர் கண்காணிப்புக் கோபுரம் அமைக்க வேண்டும்.  இவை தவிர, வாய்ப்புள்ள இடங்களில் நீரை தடுத்து, செயற்கையான அருவியை உருவாக்க வேண்டும்.  மேலும், அருகாமையிலுள்ள ஆலம்பாடி பள்ளிகொண்ட பெருமாள் கோயில்,  மஞ்சுமலை ஆகியவற்றைப் பார்வையிட்டு திரும்பவும், மாதேஸ்வரன் மலைக்குச் செல்ல மலைப்பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திரைப்படக் காட்சிகளை படம் பிடிக்கும் இடங்களை மேம்படுத்தி, அவற்றை பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
மேலும்,  ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அருவியைத் தவிர, வேறு என்ன, என்ன இடங்களைக் காண முடியும் என்பது குறித்து வரைபடத்துடன் கூடிய குறிப்பேடு அச்சடித்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கலாம்.  ஒகேனக்கல் முகப்பில் இதுகுறித்து விவரங்களை அறியும் வகையில் பதாகைகள் அமைக்கலாம்.  இத்தைகய நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.