எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்ட ஆயத்தப் பணிகளுக்கு அனுமதி: விவசாயிகள் வரவேற்பு
தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி


தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்பட மூன்று பாசனத் திட்டங்களைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தும்பலஅள்ளி அணை அமைந்துள்ளது. இந்த அணை கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால், அணை இருந்தும் பாசனம் செய்ய முடியாமல் இப் பகுதி விவசாயிகள் தவித்து வந்தனர். இதைத் தவிர்க்க தென் பெண்ணை ஆற்றில் எண்ணேகொல்புதூரில் உள்ள தடுப்பணையிலிருந்து கால்வாய் அமைத்து உபரி நீரை தும்பலஅள்ளி அணைக்குக் கொண்டு வர வேண்டும்.
இத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், தருமபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெற இயலும்.
மேலும், இக் கால்வாய் வரும் வழியில் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்துக் கிடைக்கும். எனவே, இத் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள் சுமார் 15 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இத் திட்டத்தில், தென் பெண்ணை ஆற்றிலிருந்து வலது புறத்தில் எண்ணேகொல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி வரை சுமார் 53 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமையும்.
மேலும், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 21 ஏரிகளுக்கு நீர்வரத்துக் கிடைக்கும்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இருப்பினும், திட்டம் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான இத் திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, கால்வாய் அமைப்பதற்கான ஆய்வுப்பணி கடந்த நவம்பரில் நடைபெற்றது.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே அலியாளம் அணைக்கட்டிலிருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தூள்செட்டி ஏரிக்கு இணைப்புக் கால்வாய் அமைக்க வேண்டும்.
ஜெர்த்தலாவ் கால்வாய்த் திட்டத்தை புலிகரை ஏரி வரை நீட்டிக்க வேண்டும். இத் திட்டங்களின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவர் என்பதால், இவ்விரு திட்டங்களை நிறைவேற்ற அப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது, எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு கால்வாய், ஜெர்த்தலாவ் கால்வாய்த் திட்டத்தில் 5,000 மீட்டரிலிருந்து புலிகரை ஏரி வரை கால்வாய் அமைப்பது ஆகிய மூன்று திட்டங்களுக்கும் கால்வாய்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மூன்று திட்டங்களுக்கு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ள முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி கூறியது:
எண்ணேகொல்புதூர்-
தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய் மற்றும் ஜெர்த்தலாவ் கால்வாயை புலிகரை ஏரிவரை இணைக்கும் இம் மூன்று திட்டங்களும் இவ்விரு மாவட்ட பொதுமக்கள், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இத் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத் திட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் உபரியாக செல்லும் நீரை தும்பலஅள்ளி அணைக்கு கொண்டுவரப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், தருமபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனவசதி பெறும். மேலும், திட்டத்துக்கான நிதியை விரைந்து ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...