தருமபுரி மாவட்டத்தில் விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு
கெயில் நிறுவன எரிவாயுக் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்கிற தகவல் தருமபுரி மாவட்ட விவசாயிகளிடையே


கெயில் நிறுவன எரிவாயுக் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்கிற தகவல் தருமபுரி மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை கேரளம் மாநிலம்போல மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில், கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக கர்நாடக மாநிலம், மங்களூருக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என ஏழு மாவட்டங்கள் வழியாக குழாய்கள் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 310 கி.மீ தொலைவுக்கு தமிழகத்தில் மட்டும் எரிவாயுக் குழாய் பதிக்கப்பட உள்ளன.
இதில், தருமபுரி மாட்டத்தில் தொப்பூர் அருகே பாலஜங்கமனஅள்ளி, டொக்குபோதனஅள்ளி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, குடிப்பட்டி, முத்தம்பட்டி, இண்டூர், அதகப்பாடி, பள்ளப்பட்டி, பாலக்கோடு என பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே பெரியதப்பை என்ற கிராமம் வரை குழாய்கள் செல்கிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 70 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.
கடுமையான விதிகள்: இத் திட்டத்தில், எரிவாயுக் குழாய்கள் பதிக்க நிலத்தில் 20 அடி குழிகள் தோண்டப்படும். பின்னர், குழாய்கள் பதித்த பின்பு, தடுப்புச் சுவர்போல எழுப்பி, இருபுறமும் சுமார் 35 மீட்டர் தொலைவுக்கு பாதை அமைக்கப்படும். அதேபோல, இந்தக் குழாய் பதிக்கும் நிலத்தில், ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது. வேர்கள் வளரும் வகையில் செடிகளை வளர்க்கக் கூடாது.
மேலும், நிலத்தில் பதிக்கும் குழாய் சேதப்படுத்தினால், விவசாயிகளுக்கு சிறைத் தண்டனையும் உண்டு என்கிற கடுமையான விதிகள் உள்ளன. இதனால், சிறு விவசாயிகள் தங்களது விளை நிலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
மேலும், நிலத்தின் நடுவே குழாய்களைப் பதிக்கும்போது நடுவே சுவர் கட்டுவதால், மறுபுறம் இருக்கும் நிலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தில் விளை நிலங்களில் குழாய்களைப் பதிக்கக் கூடாது என விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளின் ஒப்புதல் ஏதுமின்றி, கடந்த 2012-இல் திடீரென விளை நிலத்தில் குழாய்கள் இறக்கி அதனை பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது. இப்பணியை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கத்தினர் தடுத்துப் போராட்டம் நடத்தினர்.
கடும் எதிர்ப்பு: விவசாயிகளின் எதிர்ப்பை அடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஏழு மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பின்னர் விளை நிலங்களில் எரிவாயுக் குழாய்களைப் பதிக்க தடை விதித்தார். இந்த நிலையில், இத் தடையை எதிர்த்து, கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன், கெயில் நிறுவனத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் வருகிற 30 மாதங்களில் செயல்படுத்தி முடிக்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, விவசாயிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.என்.மல்லையன் கூறியது:
கடந்த காலத்தில் விளை நிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்க முற்பட்டபோது, எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்களை நடத்தினோம். தருமபுரி மாவட்டத்தில் சிறு விவசாயிகளே அதிகம் உள்ளனர்.
ஏற்கெனவே, உயர் அழுத்த மின் பாதைக்கு ஏராளமான விளைநிலங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், மீண்டும் எரிவாயுக் குழாய் பதிக்க விளை நிலங்களை பயன்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். அவர்கள் நிலத்தை இழந்து வெளியூருக்கு பிழைப்புத் தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும்.
எனவே, விளை நிலத்தை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறினால் அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
எனவே, கேரள மாநிலத்தைப்போல தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை ஓரம் வழியாகக் குழாய்ப் பதிக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...