பணிச் சுமையில் போலீஸார்; பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்!
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் வாகனத் தணிக்கை காரணமாக, பணிச் சுமையால் போலீஸாரும், பரிதவிப்பால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.


தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் வாகனத் தணிக்கை காரணமாக, பணிச் சுமையால் போலீஸாரும், பரிதவிப்பால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில், அரூர், பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, காரிமங்கலம் ஆகிய காவல் உள்கோட்டங்கள் உள்ளன. இக் கோட்டங்களில், தருமபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய மூன்று இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தருமபுரி, தொப்பூர், அதியமான்கோட்டை, மதிகோன்பாளையம், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, இண்டூர், ஒகேனக்கல் என மொத்தம் 28 காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், தருமபுரியில் இரண்டு நடமாடும் தணிக்கை வாகனங்கள் மற்றும் பாலக்கோடு, அரூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் தலா ஒரு நடமாடும் வாகனங்கள் பணியில் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் முன்னொரு காலத்தில் நக்ஸல் இயக்கங்கள் இருந்ததால், போலீஸார் எப்போதும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் காவல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது பெரிய அளவில் பதற்றமின்றி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பணிச் சுமையில் போலீஸார்: தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு, இரவு வேளைகளிலும், ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு ஆகிய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இவற்றைத் தடுக்க, மாவட்ட காவல் நிர்வாகம், தொடர் வாகனத் தணிக்கை மேற்கொள்ள காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவை தவிர, ஏற்கெனவே மது அருந்தி வாகனம் ஓட்டுவது, அதிவேகம், இரண்டுக்கும் மேற்பட்ட ஆள்களை ஏற்றி இருசக்கர வாகனம் இயக்குவது, தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுவது மற்றும் அதிகச் சுமை, சரக்கு வாகனங்களில் ஆள்கள் ஏற்றிச் செல்வது, சமிக்ஞைகளைப் பொருள்படுத்தாமல் செல்வது ஆகியவற்றை கண்காணித்து, தணிக்கை செய்து வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது காவலர்களுக்கு மேலிட உத்தரவு.
இதில், குறிப்பாக ஒரு காவல் நிலையத்தில் தணிக்கையில் ஈடுபடுவோர் நாளொன்றுக்கு விதிகளை மீறுவோரில் 5 பேரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
எனவே, போக்குவரத்து விதிகளை மீறுவோரை தணிக்கை செய்து வழக்குப் பதிவு செய்வது, திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க வாகனத் தணிக்கை என நாள்தோறும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் தங்களது வழக்கமான பணிகளுக்கிடையே ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர, முக்கியப் பிரமுகர்களின் வருகை, வெளியூர் காவல் பணி, பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளையும் காவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால், விடுப்பின்மை, ஓய்வின்மை ஆகியவற்றுக்கிடையே பணிபுரியும் போலீஸார், கட்டாய வாகனத் தணிக்கை பணியால் மேலும் பணிச் சுமைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
குறைகளைக் களைய வேண்டும்: வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் களையவும், காவலர்களுக்கு பணிச் சுமையைக் குறைக்கவும் தேவையான உடனடி நடவடிக்கையை காவல் துறை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக, திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க நகரப் பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதேபோல, காவலர்களின் குறைகளை உயரதிகாரிகள் நேரிடையாகக் கேட்டறிந்து, அவற்றை களைய வேண்டும். காவலர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதால், அவர்களது குடும்பத்துடன் வசிக்கும் வகையில் அவரவர் சொந்த ஊர்களில் பணி வழங்க வேண்டும். இவற்றையெல்லாம் கடந்து போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணியமர்த்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
யோகா பயிற்றுக் குழு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு பணிச் சுமை, அழுத்தம் ஆகியவற்றைப் போக்கிட மருத்துவத் துறை, கல்வித் துறை, ஓய்வுபெற்ற காவலர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு குழு யோகா பயிற்சி தர தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக் குழுவை பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி பெற்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் குழு காவலர்களுக்கு யோகா கற்றுத் தரும். மேலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காவலர்களது குறைகள் கேட்கப்படுகின்றன. இதில், அவர்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சோதனை மேல் சோதனை!
திருட்டு மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு முக்கிய இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாலும், நாள்தோறும் அவர்கள் மேற்கொள்ளும் தணிக்கையில் சிக்கி அவதிக்குள்ளாவது தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையே அதிகம்.
பணி முடித்து வீடு திரும்பும் இவர்களிடம், தணிக்கை என்ற பெயரில் வாகனத்தை திடீரென பறிமுதல் செய்துகொள்வது, வழக்குப் பதிவு செய்வது ஆகியவற்றால் இத்தகையோர்
பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், ஒரு சில காவலர்கள் தங்களது பணிச் சுமையால் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...