திறந்து ஏழாண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத மருக்காரம்பட்டி வாரச் சந்தை
திறப்பு விழா கண்டு ஏழாண்டுகள் ஆகியும், மருக்காரம்பட்டி வாரச்சந்தை இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திறப்பு விழா கண்டு ஏழாண்டுகள் ஆகியும், மருக்காரம்பட்டி வாரச்சந்தை இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது வட்டுவனஅள்ளி ஊராட்சி. முற்றிலும் மலை, வனம் சூழ்ந்த இந்த ஊராட்சியில், மருக்காரம்பட்டி, நாவனம்பட்டி, பவளந்தூர், ஜெல்ராம்பட்டி, காந்திநகர், எலுமல்மந்தை, அட்டப்பள்ளம், கோட்டூர்மலை, கொடிக்கம்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இக் கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம். இங்கு விளைகின்ற தக்காளி, கத்திரிக்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை மூட்டைகளாகக் கட்டி, பேருந்துகள் மூலம் பென்னாகரம் எடுத்துச் சென்று விவசாயிகள் விற்று வருகின்றனர். இக் கிராமங்களுக்கு போதிய பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை சந்தைகளுக்குக் கொண்டு விற்பனை செய்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மலை கிராம மக்களின் நலன் கருதி, வட்டுவனஅள்ளி ஊராட்சியிலேயே விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்கும் வகையில், கடந்த 2009 -10 -இல், மருக்காரம்பட்டி கிராமத்தில் சில லட்சம் ரூபாய் மதிப்பில் வாரச்சந்தை அமைக்கப்பட்டது.
இந்தச் சந்தையில், 10-க்கு 10 என்கிற அளவில் ஒரு வரிசைக்கு 5 கடைகள் வீதம் மூன்று வரிசைகளில் 15 கடைகள் கட்டப்பட்டன. இக் கடைகளுக்கு நடுவில் விவசாயிகள் கூடுவதற்கு ஏற்ப ஏராளமான காலி இடம் உள்ளது. மேலும், இங்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்காக கழிப்பறை, சிறுவிசை மின்பம்புடன் கூடிய தரைமட்டத் தொட்டியும் கட்டப்பட்டன. பணிகள் அனைத்தும் நிறைவுற்று இந்த வாரச்சந்தையை அப்போதைய ஆட்சியர் ஆர்.லில்லி திறந்து வைத்தார்.
இருப்பினும், இதுநாள் வரை மருக்காரம்பட்டி வாரச்சந்தையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்தச் சந்தையை அப் பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2014 - 15-இல் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், பயன்பாட்டுக்கு வராத இந்த வாரச்சந்தையின் பராமரிப்புக்காக ரூ.70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இந்த நிதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இத் திட்டத்தின் நோக்கம் இதுவரை நிறைவேற்றப்படாமல், மருக்காரம்பட்டி வாரச்சந்தை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது.
எனவே, மலை கிராம விவசாயிகள் நலன் கருதி தொடங்கப்பட்ட திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையிலும், இந்த வாரச்சந்தையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வட்டுவனஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...