நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பழுதான குடியிருப்புகள்: பரிதவிப்பில் இருளர்கள்!

பென்னாகரம் அருகே குடியிருப்புகள் பழுதானதால், அங்கு வசிக்கும் இருளர் இன மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:08 pm

ஆா்.ராதாகிருஷ்ணணன்

பென்னாகரம் அருகே குடியிருப்புகள் பழுதானதால், அங்கு வசிக்கும் இருளர் இன மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது வட்டுவனஅள்ளி. இங்குள்ள மொரப்பூர் காடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கல்யாணகுண்டு குகை, மொண்டியாளம் குகை என வனப்பகுதியில் கூட்டம், கூட்டமாக நூற்றுக்கணக்கான இருளர் இன மக்கள் குகைகளிலும், பாறை இடுக்குகளிலும், குடிசைகள் அமைத்தும் வசித்து வந்தனர்.
காட்டுக்குள் கிழங்கு, சுண்டைக்காய் பறித்து அவற்றை சமைத்து உண்டு தங்களது வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். மேலும், வனப்பகுதியில் கிடைக்கும் விறகு சேமித்து அதனை வனத்திற்கு வெளியே உள்ள கிராமங்களுக்கு சுமந்து சென்று விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.  இந்த நிலையில், இந்த மக்களை சந்தித்து வனப்பகுதியிலிருந்து வெளியேறும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியதால் இவர்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தனர்.
அவ்வாறு, வெளியே வந்த இவர்கள், கோட்டூர்மலையி, எலுமல்மந்தை, குழிப்பட்டி ஆகிய வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தில் வீடுகள் கட்டி அதில் குடியமர்த்தப்பட்டனர். இதில், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட குழிப்பட்டி இருளர் காலனியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் சில குடும்பங்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது, இந்த வீடுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் அனைத்தும் மேற்கூரைகள் பழுதாகியுள்ளன. மேலும், பல வீடுகளில் உள் பக்கம் மேற்கூரைகளில் சிமென்ட் பெயர்ந்து விழுந்து கம்பிகள் தெரிகின்றன. இதனால், மேற்கூரைகளிலிருந்து மழைக்காலங்களில் குடியிருப்புகளில் மழைநீர் விழுந்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தண்ணீர் பிரச்னை: ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதில் ஒரு ஆழ்துளைக் கிணறு ஏற்கெனவே பழுதாகிவிட்டது. மற்றொரு ஆழ்துளைக் கிணற்றில் நீண்ட நேரத்திற்கு பிறகே தண்ணீர் கிடைக்கிறது. மேலும், சிறு மின் விசை பம்பு அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது.
ஆனால், இத் தொட்டியும் பழுதாகி தண்ணீர் வருவதில்லை. ஒகேனக்கல் குடிநீர் மட்டும் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வருகிறது. அதிலும், போதிய நீர் தங்களுக்கு கிடைப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல, வீடுகளில் குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் இரவு நேரங்களில் போதிய அளவு வெளிச்சம் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, இருளர் காலனியில் வசிக்கும் மாதையன் கூறியது:
வனப்பகுதியில் வசித்து வந்த எங்களை சில ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றி புதிய குடியிருப்புகளை கட்டி குடியமர்த்தினர். இந்த வீடுகள் பெரும்பாலும் தற்போது பழுதடைந்துள்ளது. மேலும், 17 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறிய எங்களில் பலருக்கு திருமணம் முடிந்து குழந்தைகளுடன் உள்ளோம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த சிறிய குடியிருப்பிலேயே போதிய இடவசதியின்றி வசித்து வருகிறோம். மேலும், எங்களது காலனியில் உள்ள ஆதரவற்றோர் சிலருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதியத் தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றளவும், நாங்கள் வனப்பகுதியில் கிடைக்கும் சுண்டைக்காய் சேகரித்து அவற்றை விற்று பிழைப்பு நடத்திவருகிறோம். எனவே, எங்களது குடியிருப்புகளில் பழுது நீக்கித் தர வேண்டும். மேலும், தற்போது புதியதாக திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருவோருக்கு புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.