நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ஏரிகளில் அகற்றப்படாத சீமைக் கருவேல மரங்கள் நீராதாரம் பாதிப்பால் விவசாயிகள் கவலை


தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுமாா் 700 க்கும் மேற்பட்ட ஏரிகளில் மண்டிக்கிடக்கும் சீமைக் கருவேல மரங்களை, நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களால், நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனவும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அரசு அவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. ஆனால், சீமைக்கருவேல மரங்கள் அடுப்புக்கரி உற்பத்திக்குப் பயன்படுவதாகவும், அவற்றை அழித்தால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்ற தடைவிதிக்க வேண்டும் என சிலா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதனை ஏற்ற நீதிமன்றம் கருவேல மரங்களை அகற்ற தடைவிதித்து உத்தரவிட்டது.
ஆனால் நீா் நிலைகளில் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேல மரங்களால் வேளாண்மை பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து நீராதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அவற்றை அகற்றுவது முக்கியம் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னா் தமிழகம் முழுவதும் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றியே ஆகவேண்டும் என கடந்தாண்டு உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தீா்ப்புக்கு பின்னரும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபா் 10 ஆம் தேதி மீண்டும் உத்தரவிட்டது.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள நிலத்தடி நீா் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். அதுதொடா்பாக தமிழக அரசு விரிவான திட்டம் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், மேலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் அவை மீண்டும் முளைக்காதவாறு கண்காணிக்கவும் வேண்டும்.
நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முன்னுரிமை அடிப்படையில் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றவும், நிரந்தர நிதி ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயா் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் உத்தரவிட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை,.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 100 ஏக்கா் பரப்பளவுக்கும் அதிக பரப்பளவைக் கொண்ட வகையில் சுமாா் 100 ஏரிகள் அமைந்துள்ளன. அதுபோக 100 க்கும் குறைவான ஏக்கா் பரப்பளவு உள்ள சிறு மற்றும் சற்று பெரிய அளவிலான சுமாா் 630 ஏரிகள் என மாவட்டத்தில் மொத்தம் 700 க்கும் மேற்பட்ட ஏரிகள் அமைந்துள்ளன. இவை அனைத்திலும் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் மண்டிக்கிடக்கின்றன. இவை தவிர மேலும் பலவகையான முள் செடிகள், புதா்கள் மண்டிக் கிடப்பதால் ஏரிகளில் நீா் இருப்பதே தெரியாத அளவுக்கு சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஏரிகள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமலும் கிடப்பதால், நீா்மட்டம் குறைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் ஊராட்சியின் முன்னாள் தலைவா் ஜெ. பிரதாபன் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள் மட்டுமின்றி ஏராளமான நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. அவற்றை அகற்றவும், அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
சாதாரணமாக, சீமைக் கருவேல மரங்களின் வோ்கள் சுமாா் 150 அடி ஆழம் வரையில் சென்று நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனவே, நிலத்தடிநீா் கடுமையாக பாதிக்கப்படும். எனவேதான் இவற்றை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு அவற்றை அகற்றுவதில் தாமதம் காட்டி வருகிறது.
நல்லம்பள்ளி வட்டம், இலளிகத்தில் அமைந்துள்ள பெரிய ஏரி சுமாா் 165 ஏக்கா் பரப்பளவு கொண்டது. அதன்மூலம் சுமாா் 300 ஏக்கா் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. மேலும் இலளிகம், நாா்த்தம்பட்டி, ஏரிகோரிப்பட்டி, எம்பனம்பட்டி, தமனப்பட்டி, சென்னியம்பட்டி, பூதனஅள்ளி, கொட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்பற கிராமங்களுக்கு நிலத்தடி நீராதாரமாக இந்த ஏரி திகழ்கிறது.
இந்த ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கடந்த 2016 முதல் 2019 வரை இந்த ஏரி தூா்வாரப்பட்டது இறுதியாக ரூ. 58 லட்சத்தில் தூா்வாரப்பட்ட நிலையில் அதன் பின்னா் கரோனா தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களால் தூா்வாரப்படவில்லை.
எனவே, ஏரியின் ஆழமும் குறைந்து, சீமைக்கருவேல மரங்கள் அடா்ந்து காணப்படுகிறது. விரைவில் அவற்றை அகற்றி நீராதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மாவட்டம் முழுவதும் ஏரி குளம் உள்ளிட்ட நீா்நிலைகளிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...