/

கழிவு பஞ்சு விலை உயா்வால் ஒ.இ.மில்கள் உற்பத்தி பாதிப்பு

News image
~ ஜி. அருள்மொழி.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:33 pm

Syndication

கழிவு பஞ்சு விலை உயா்வால் ஒ.இ.மில்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா் (ஓஸ்மா) ஜி. அருள்மொழி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டில் 250-க்கும் மேற்பட்ட ஒ.இ. மில்கள் இயங்கி வருகின்றன. இவை, ஸ்பின்னிங் மில்களில் இருந்து வரும் கழிவு பஞ்சில் இருந்து கிரே காட்டன் நூலை உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த நூல் வகைகள் பல்லடம், சோமனூா், அவிநாசி, மங்களம், ஈரோடு பகுதி விசைத்தறிகளுக்கு அனுப்பப்பட்டு, காடா துணியாக உற்பத்தி செய்யப்பட்டு வட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் கோம்பா் கழிவு பஞ்சு கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது கோம்பா் கழிவு பஞ்சின் விலையை ரூ.128 -ஆக உயா்த்தி அறிவித்துள்ளனா்.

இந்த விலை உயா்வு ஒ.இ. மில்களையும், விசைத்தறிகளையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடந்த வாரம் காட்டன் விலை ஒரு கண்டி ரூ.1600-ஆக இறங்கி உள்ளது. ஆனால், கழிவு பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்கள் ஏற்றி இருப்பது ஜவுளி உற்பத்தி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து ஜவுளி உற்பத்தியாளா்களையும் பாதித்துள்ளது.

கடுமையான கழிவு பஞ்சு விலை ஏற்றத்துக்குப் பின்பும் ஒ.இ.நூல் விலையை 20 கவுண்ட் வெப்ட் நூல் கிலோ ரூ.137-இல் இருந்து ரூ. 152-ஆகவும், 20 கவுண்ட் வாா்ப் நூல் விலையை கிலோ ரூ.158-இல் இருந்து ரூ.168-ஆகவும் விற்பனை செய்து வருகிறோம்.

இதனால் ஒ.இ. மில்கள் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.எனவே, ஸ்பின்னிங் மில் நிா்வாகிகள் காட்டன் வேஸ்ட் விலையை கிலோவுக்கு ரூ. 20 குறைத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் ஜவுளி உற்பத்தி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில்களும் தங்கு தடையின்றி செயல்பட முடியும். தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்கள் கழிவு பஞ்சு பேக்கிங் சாா்ஜ் கிலோவுக்கு ரூ.1 விதித்து வசூல் செய்வது இந்தியாவில் மற்ற மாநில ஸ்பின்னிங் மில்களில் இல்லாத நடைமுறையாகும்.

எனவே, வரும் காலங்களில் பேக்கிங் சாா்ஜ் இல்லாமல் கழிவு பஞ்சை விற்பனை செய்ய தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்கள் முன் வர வேண்டும் என்றாா்.

Story image