/

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டம்

News image
தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:32 pm

Syndication

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் தாலுகா, புதுப்பை கிராமம், தங்கமேடு பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் 25 குடும்பத்தினா் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருவதாகவும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மக்கள் பட்டா வழங்கக் கோரி ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளா் குண்டடம் காளிமுத்து தலைமையில் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.