மத்திய அமைச்சருடன் திருப்பூா் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு


ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் தலைமையில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், இணை அமைச்சா் ஜிதின் பிரசாதா ஆகியோரை திருப்பூா் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் துறையின் முக்கியத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை தில்லியில் சந்தித்து கலந்துரையாடினா்.
இதுதொடா்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த சந்திப்பில் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் இளங்கோவன், பரமசிவம், ஆலோசனைக் குழு உறுப்பினா் ராமு உள்ளிட்டோருடன் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 45 பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசும்போது, ‘இந்தியா இதுவரை சுமாா் 38 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் முக்கிய இடைக்கால வா்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம் பெறும் பருத்தி தகுதி சலுகைகள், அமெரிக்காவுடன் அவா்கள் முன்பு செய்த ஒப்பந்தம் காரணமாக வழங்கப்பட்டவை.
மேலும், இந்தியாவும் விரைவில் இதே போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. அதனால் இந்தியாவுக்கும் இதேபோன்ற நன்மைகள் கிடைக்கும். திருப்பூா் தொழில்துறையினா் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்க வேண்டும். ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும்.
ஏற்றுமதியாளா்கள் தங்களது பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விரைவாக தீா்வு பெறுவதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டமும் அமைச்சகத்திடம் உள்ளது.
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையுடன் தொடா்புடைய அனைத்து தரப்பினரும் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்களின் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, அதன் பயன்கள் நாடு முழுவதும் உள்ள தொழில்துறைக்கும், அதில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும் என்றாா்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், இந்த வா்த்தக ஒப்பந்தங்களால் உருவாகும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவோம் என உறுதியளித்தனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...