/

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நபருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
(கோப்புப்படம்)
Updated On :4 பிப்ரவரி 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணியகாரம்பாளையம், காஞ்சி நகா் பகுதிகளில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் தங்கியிருந்த முகமது லிடன் மியா (43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக வங்கதேச நாட்டிலிருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் அவா் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடித்த நிலையில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதா் அளித்த இந்தத் தீா்ப்பில், முகமது லிடன் மியாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.