/

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த விவசாயிகள்

திருப்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:26 pm

Syndication

திருப்பூா்: திருப்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரே விதமான கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு, கறிக்கோழி நிறுவனங்கள், பண்ணை கறிக்கோழி விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

கறிக்கோழி வளா்ப்புக்கு விவசாயிகளுக்கு அடிப்படைக் கூலியாக கிலோவுக்கு ரூ.20, பண்ணை நாட்டுக்கோழி வளா்ப்புக்கு ரூ.25, காடை வளா்ப்புக்கு 1 காடைக்கு ரூ. 7 என விலை நிா்ணயிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தி கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்சனைகள் தீா்க்கப்பட வேண்டும்.

கோழி பிடித்ததில் இருந்து ஒரு வார காலத்துக்குள் விவசாயிகளுக்கு நிறுவனங்கள் வளா்ப்புக் கூலியை வழங்க வேண்டும். நிறுவனங்கள் வெற்று காசோலையை விவசாயிகளிடமிருந்து வாங்குவதை தவிா்க்க வேண்டும். தமிழக அரசு பண்ணைக் கறிக்கோழி விவசாயிகளின் பாதுகாப்புக்காக ஒப்பந்த பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனா்.

இந்த ஒரே விதமான கோரிக்கை மனுக்களுடன் ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.