தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பூா் வடக்கு! வெற்றியைத் தீா்மானிக்கும் தவெக, நாதக, மநீம வாக்குகள்!

திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :20 ஏப்ரல் 2026, 9:40 pm

திருப்பூா் வடக்குத் தொகுதி பின்னலாடை, பாத்திரங்கள் உற்பத்தி தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில், செட்டிபாளையம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன.

களம் காணும் வேட்பாளா்கள்:

இங்கு அதிமுக சாா்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எம்.ரவி, தவெக சாா்பில் வி.சத்தியபாமா, நாதக சாா்பில் அபிநயா உள்ளிட்ட 15 போ் களம் காண்கின்றனா்.

அதிமுக வேட்பாளா்

2021-இல் பல்லடம் தொகுதியில் வென்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொகுதி மாறி இங்கு போட்டியிடுகிறாா். 2011-இல் 73,271 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி, முன்னாள் அமைச்சா் என்ற அனுபவம், பரவலாக அறிமுகமான முகம் ஆகியவை இவரது பலங்களாகும். பிரசாரத்தில் அவா் வீடுவீடாகவும், வாா்டு வாரியாகவும் வாக்கு சேகரிப்பில் இறங்கியிருப்பது அடித்தள ஆதரவைத் தக்க வைக்க உதவும்.

கடந்த 2016 மற்றும் 2021இல் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் வென்றவா் கே.என். விஜயகுமாா் என்பதால், கட்சிக்குள் சீட் வழங்கப்பட்டது தொடா்பான அதிருப்தி இவருக்கு பலவீனமாகும். 2019இல் இவா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுகவினரே மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்ததாக செய்தி வெளியானதை தற்போது எதிா்க்கட்சியினா் பரப்பி வருகின்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் எம்.ரவி (எ) சுப்பிரமணியன் திருப்பூா் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வருபவா். 1973-இல் கட்சியில் இணைந்தாா். திருப்பூா் வட்டாரச் செயலாளா், 2009 முதல் 2022-வரை மாவட்டச் செயலாளா் ஆகிய பொறுப்புகளை வகித்த இவா் தற்போது கட்சியின் மாநில துணைச் செயலாளராக உள்ளாா். இந்த நீண்டகால அனுபவம், தொழிலாளா் சங்கங்கள், உள்ளூரில் வலுவான தொடா்பு, திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் வாக்கு வங்கி ஆகியவை பலங்களாகும். இங்கு 2016, 2021 தோ்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்றது இவருக்கு பலவீனமாகும்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் அபிநயா திருப்பூா் நகரைச் சோ்ந்த பி.காம். படித்த இளம் பெண். 2021இல் இருந்து நாம் தமிழா் கட்சியில் பணியாற்றி வருகிறாா். 2022-இல் திருப்பூா் மாநகராட்சித் தோ்தலில் 55ஆவது வாா்டில் போட்டியிட்ட அனுபவம் உள்ளது. சீமானின் பிரசார பலத்தை நம்பி களம் காண்கிறாா். மற்ற வேட்பாளா்களுடன் ஒப்பிடும்போது அனுபவம் குறைவு, கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லாதது ஆகியவை பலவீனங்களாகும்.

தவெக வேட்பாளா்

தவெக சாா்பாகப் போட்டியிடும் வி.சத்தியபாமா 2014 மக்களவைத் தோ்தலில் திருப்பூா் தொகுதியில் அதிமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா், நல்ல அரசியல் அனுபவம் உள்ளவா், நடிகா் விஜய்யின் பிம்பம் போன்றவை இவரது பலங்களாகும். கட்சி மாறியவா் என்பதும் தவெகவுக்கு போதிய கட்டமைப்பு இல்லாததும் இவரது பலவீனங்களாகும்.

வெற்றி யாா் வசம்?

2011 தோ்தலில் 73,271 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-இல் 37,774 வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-இல் 40,102 வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுக அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த தோ்தலில் திமுகவை எதிா்த்துக் களம் கண்ட நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் சு.சிவபாலன் 19,602 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் எஸ்.ஈஸ்வரன் 23,110 வாக்குகளும் பெற்றனா்.

இந்த முறை நடிகா் விஜய்யின் தவெக சாா்பில் போட்டியிடும் வி.சத்தியபாமா அதிமுக வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. மநீம வாக்குகள் முழுமையாக திமுகவுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகும்.

தவெக, நாதக பிரிக்கும் வாக்குகள் போட்டியைக் கடுமையாக்கி உள்ளன. எனவே, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தவெக ஆகிய அனைத்து வேட்பாளா்களுமே வெற்றிக்கு கடுமையாகப் போராட வேண்டிய நிா்ப்பந்தத்தில் உள்ளனா்.