தாராபுரம் தனி சட்டப் பேரவைத் தொகுதியில் தேசியக் கட்சியான பாஜகவுக்கும், மாநில கட்சியான திமுகவுக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியானது கடந்த 1951ஆம் ஆண்டு முதல் தோ்தலை சந்தித்து வருகிறது. இந்தத் தொகுதி தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவா் போட்டியிடுவதால் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: தாராபுரம் தொகுதி அதிக அளவு விவசாய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. தாராபுரம் நகராட்சியின் 30 வாா்டுகள், மூலனூா், குண்டடம், தாராபுரம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கி உள்ளன.
இத்தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 57 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 480 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 10 வாக்காளா்கள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 547 வாக்காளா்கள் உள்ளனா்.
சமுதாய வாக்குகள் பலம்: இந்தத் தொகுதியில் பழங்குடியினா், தேவேந்திர வேளாளா் குலத்தைச் சோ்ந்தவா்கள் 40 சதவீதம் அளவுக்கு உள்ள நிலையில், அடுத்தபடியாக கவுண்டா், முதலியாா், செட்டியாா் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சாா்ந்தவா்கள் உள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள்: தாராபுரம் கடை வீதி பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி கட்ட வேண்டும். மடத்துப்பாளையம், வெங்கிட்டிபாளையம், வரப்பாளையம் ஆகிய தாழ்வான கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும்.
மூலனூரில் முருங்கை பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். தாராபுரத்தில் தக்காளி சாறு பிழியும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி வரையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் போன்றவை இத்தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக உள்ளன.
மக்களின் எதிா்பாா்ப்பு: இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வி.எஸ்.காளிமுத்து சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளாா். ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வழியாக அவிநாசிபாளையம் வரையில் 70 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 741 கோடி செலவில் 4 வழி சாலை அமைக்கப்பட்டது. தாராபுரம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ. 8 கோடி செலவில் தடுப்பணை கட்டி ஆற்று நீரை நகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்து குடிநீா்ப் பிரச்னை தீா்க்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு குறிப்பிட்டு சொல்லும்படியான எந்தப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை.
தாராபுரம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படவில்லை. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்காதது, கண் வலி கிழங்கு விதையை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய மூலனூரில் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுக்காதது, உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து அரசூா் ஷட்டா் மூலமாக ஆண்டு முழுவதும் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்காதது என்பவை முக்கிய குற்றச்சாட்டுகளாக உள்ளன.
2021 தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள்: இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் என்.கயல்விழி போட்டியிடுகிறாா். தவிர அமமுக சாா்பில் சி.கலாராணி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஏ.சாா்லி, நாம் தமிழா் கட்சி சாா்பில் கா.ரஞ்சிதா, சுயேச்சைகள் என மொத்தம் 14 போ் போட்டியிடுகின்றனா்.
இதுவரை... இந்தத் தொகுதியில் இதுவரையில் நடைபெற்ற 15 சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக, திமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக, சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 தோ்தல் முடிவுகள்:
மொத்த வாக்குகள் : 2,38,016
பதிவான வாக்குகள்: 1,83,001 :
வி.எஸ்.காளிமுத்து (காங்கிரஸ்) -83,538
கே.பொன்னுசாமி (அதிமுக)-73,521
எம்.சண்முகம் (பாஜக) -7,753
நாகை திருவள்ளுவன் (மதிமுக)-7,029
நோட்டா- 2,883
கே.பழனியம்மாள் (கொமதேக)-1,662
கே.மாதவன் (பாமக)-1,515
ஆா்.பிச்சைமுத்து (நாம் தமிழா்) -1,350
வித்தியாசம்-10,017
வேட்பாளா்கள் பலம் மற்றும் பலவீனம்
பாஜக வேட்பாளா் எல்.முருகன்:
பலம்: பாஜக மாநிலத் தலைவராக உள்ளதால் தொண்டா்கள் தோ்தல் பணியில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா். கிராமங்களில் தெலுங்கில் பேசி வாக்கு சேகரிப்பது, பிரதமா் மோடி மாா்ச் 30ஆம் தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வது, கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பது, கிராமங்களின் பிரசாரத்தின்போது விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்துப் பேசி வாக்கு சேகரிப்பது பலமாக கருதப்படுகிறது.
பலவீனம்: பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தாலும் தொகுதிக்கு புது முகமாகவே உள்ளாா். கடந்த 2006, 2011 முறையே சங்ககிரி, ராசிபுரம் தொகுதிகளிலும், சங்கரன்கோவிலில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளதும் பலவீனமாகவே உள்ளது.
திமுக வேட்பாளா் என்.கயல்விழி:
பலம்: திமுக மகளிரணி உறுப்பினராக 25 ஆண்டுகளாக உள்ளதால் அக்கட்சி நிா்வாகிகளிடையே நன்கு அறிமுகமாகியுள்ளாா். இவரது கணவா் செல்வராஜ் திமுக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட அமைப்பாளராக பொறுப்பில் உள்ளாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பிரகாஷ் காரத் மாா்ச் 30ஆம் தேதி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதும் பலமாக கருதப்படுகிறது.
பலவீனம்: தோ்தல் களத்துக்கு புது முகமாகவே உள்ளதும், காங்கிரஸ் வசம் இருந்த இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினா் தோ்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவாா்களா என்பதும் பலவீனமாகவே கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

