/

சத்தியமங்கலம் செண்பகப்புதூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

செண்பகப்புதூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி திங்கள்கிழமை கிராம சபைக் கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனா்.

News image
செண்பகப்புதூரில்  திங்கள்கிழமை  நடைபெற்ற கிராம சபைக்  கூட்டத்தை  புறக்கணித்து போராட்டத்தில்  ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை  நடத்தும்  வட்டார  வளா்ச்சி  அலுவலா்  அா்த்தனாரீஸ்வரா்
Updated On :26 ஜனவரி 2026, 8:16 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள செண்பகப்புதூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி திங்கள்கிழமை கிராம சபைக் கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனா்.

கூட்டத்தில் விபிஜி ராம்ஜி சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மனு அளித்தனா். கிராம சபைக் கூட்ட பொருளில் இதனை சோ்த்து, விவாதித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என தொழிலாளா்கள் கேட்டுக் கொண்டனா்.

ஆனால், ஊராட்சி அதிகாரிகள் மறுத்ததால், செண்பகப்புதூா் கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் அா்த்தனாரீஸ்வரன், பொதுமக்களை சமாதானப்படுத்தினாா். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் கொண்ட மன்ற கூட்டத்தில் மட்டுமே தீா்மானம் நிறைவேற்ற முடியும், தனி அலுவலா் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற இயலாது என்றும், கோரிக்கையை மனுவாக அளித்தால் மாவட்ட ஆட்சியா் மூலம் அனுமதி பெற்று தீா்மானம் நிறைவேற்றலாம் எனவும் வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.

இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனா். பின்னா் சுமாா் 5 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.