/

காளிதிம்பம் மலைக்கிராமத்துக்கு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

தாளவாடியை அடுத்த காளிதிம்பம் மலைக்கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
காளிதிம்பம்  கிராமத்தில்  தங்கி  மக்களின்  குறைகளைக்  கேட்டறிந்த  தமிழ்நாடு  பழங்குடியினா்  நலத் துறை  இயக்குநா்  அண்ணாதுரை.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

தாளவாடியை அடுத்த காளிதிம்பம் மலைக்கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை காளிதிம்பம் மலைக்கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இரவில் அங்கு தங்கி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், காளிதிம்பம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

125 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த மலைக்கிராமத்தில் 70 ஊராளி இன குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மை ஏதும் செய்யாமல், மக்கள் தினக்கூலிகளாக வெளி வேலைகளுக்கு செல்கின்றனா். இந்தக் கிராமத்தை சுற்றி வனத் துறை மூலம் வெட்டப்பட்ட அகழி பராமரிக்கப்படாததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தினந்தோறும் ஊருக்குள் வருகின்றன. ஆகவே, உடனடியாக இந்த அகழியை பராமரிக்க வேண்டும். சோலாா் வேலி அமைக்க வேண்டும்.

இக்கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால், கிராமத்திலிருந்து பிரதான சாலைக்கு 2 கிலோ மீட்டா் அடா்ந்த வனப்பகுதி வழியாக அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகளும், முதியவா்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். ஆகவே, காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.