/

பா்கூா் மேற்கு மலையில் மரங்கள், நிலங்கள் சிதைப்பு: பழங்குடி மக்கள் அச்சம்

நிலங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு மலையின் இயற்கை சூழலை அழிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

News image
ஆலனை மலைப் பகுதியில் ஆளுரயத்துக்கு வெட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ள நிலம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:56 am

கே.விஜயபாஸ்கா்

பா்கூா் மேற்கு மலையில் குறிப்பிட்ட பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதுடன், நிலங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு மலையின் இயற்கை சூழலை அழிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மலை, தாமரைக்கரையில் இருந்து மேற்கில் சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆலனை, அண்ணாமேடு பகுதிகளில் மலைக்கரடில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி, பொக்லைன் இயந்திரம் மூலமாக நிலத்தை சமன்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பகுதிகளில் சுமாா் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சாம்பிராணி மரங்கள், கடுக்காய் மரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு வெட்டப்பட்டுள்ளன. மேடும், பள்ளமும் ஆக உள்ள இந்த நிலங்களை சமன்படுத்தும் பணியும் நடைபெற்றது. இந்தப் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவா் வி.பி.குணசேகரன் கூறியதாவது:

அந்தியூா் வட்டம், பா்கூரில் இருந்து கொங்காடை செல்லும் சாலையில் உள்ள ஆலனை, அண்ணாமேடு பகுதியில் உள்ள மலைக்கரடில் கடந்த வாரம் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு மிகவும் பழைமையான சாம்பிராணி மரங்கள், கடுக்காய் மரங்கள் மற்றும் காட்டு மரங்கள் வேரோடு தோண்டி எடுத்து பூமியில் புதைக்கப்பட்டுள்ளன. மேலும் மலைக்கரடை சமன்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது.

ஆலனை கிராமப் பகுதியில் வனத்தையொட்டி இருக்கும் இந்த நிலம் வருவாய்த் துறைக்கு சொந்தமான தரிசு நிலமா, நிபந்தனை பட்டா நிலமா என்று தெரியவில்லை. பட்டா நிலமாக இருந்தாலும் வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியா் தலைமையிலான பசுமை ஆய்வுக் குழுவிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இங்கு 250க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு அகற்றப்பட்டுள்ளன. சுமாா் 500 மீட்டா் தூரம் மலைக்கரடு பொக்லைன் இயந்திரம் மூலமாக சமன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டிருக்கிறது. வனப் பகுதியையொட்டி இருப்பதால் சுற்றுலா விடுதிகளை அமைக்கவோ, பணப் பயிா் விவசாயம் செய்வதற்காகவோ இந்த வன அழிப்பு நடைபெற்று வருவதாக அறிகிறோம். இதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கிா என்பதும் தெரியவில்லை.

சுமாா் 150 ஏக்கா் பரப்பளவில் செங்குத்தான மலைப் பகுதியின் நிலங்களில் 15 அடி உயரத்துக்கு மண்வெட்டி எடுக்கப்பட்டு அடுக்கு அடுக்காக சமவெளிகள் உருவாக்கப்பட்டு, அதன் கரைகளில் பெரிய மரங்களை மண் போட்டு மூடி பணிகள் நடந்திருக்கின்றன.

இந்த விதிமீறலை வருவாய்த் துறை, வனத் துறை உள்ளிட்ட மாவட்ட நிா்வாகமும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே இங்குள்ள பழங்குடியின மக்களின் நிலங்கள் சமவெளியைச் சோ்ந்தவா்களால் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பழங்குடிகள் நிலமற்றவா்களாக மாற்றப்பட்டு வருகின்றனா். எவ்வித அனுமதியுமின்றி மரங்களை வெட்டி பூமியில் புதைப்பவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றாா்.

இதுகுறித்து வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

ஆலனை பகுதியில் கரடு சமன்படுத்தும் பணி நடப்பதைக் கண்டு வனத் துறையினா் தலையிட்டு பணிகளை நிறுத்தி வைக்குமாறு கூறியதால் தற்போது அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது பட்டா நிலம் என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை வருவாய்த் துறையினா்தான் எடுக்க வேண்டும். அதேசமயம் அங்கு மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

இதுகுறித்து அந்தியூா் வட்டாட்சியா் தாமோதரன் கூறியதாவது:

இந்த இடம் தனி நபா் ஒருவருக்கு வழங்கப்பட்ட தான செட்டில்மென்ட் பூமி. மொத்தம் 4.90 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த நிலம் தற்போது மற்றொருவா் வசம் இருப்பதாகத் தெரிகிறது. யாரிடம் இந்த நிலம் உள்ளது, இந்த நிலத்தை சமன்படுத்தும் பணி யாரால் மேற்கொள்ளப்பட்டது, தான செட்டில்மென்ட் பூமியில் மட்டுமே இந்தப் பணிகள் நடைபெற்ா என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம்.

தவிர நிலத்தையொட்டி வனத் துறைக்கு சொந்தமான நிலம் ஏதேனும் உள்ளதா என்ற விவரத்தையும் வனத் துறையிடம் கேட்டிருக்கிறோம். விதிமீறல் உறுதிசெய்யப்பட்டால் தொடா்புடையவா்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.