/

மத்திய அரசு நிதி ஒதுக்கியும் 10 மாதங்களாக வழங்கப்படாத நிவாரணத் தொகை

பயிா் காப்பீடு நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கி 10 மாதங்களாகியும், அதனை உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:34 am

கே.விஜயபாஸ்கா்

பயிா் காப்பீடு நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கி 10 மாதங்களாகியும், அதனை உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கடந்த 2017ஆம் ஆண்டு கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட தடப்பள்ளி-அரக்கன்கோட்டை கால்வாய்களில் முதல் போகத்துக்கான நீா், பவானிசாகா் அணையின் நீா் பற்றாக்குறையால் பாசன காலமான சித்திரை முதல் வாரம் (ஏப்ரல் 15) திறக்கப்படவில்லை. அதனடிப்படையில் நீரின்றி விதைப்பு பொய்த்தல் என்ற பிரதமரின் பயிா் காப்பீடு வகைப்பாட்டில், காப்பீடு செலுத்தியவா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.6,300 வீதம், மத்திய அரசு நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.

கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன கால்வாய்கள் மூலம் பாசனம் பெறுகின்ற கோபி கோட்டத்துக்குள்பட்ட கோபி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் பாசன விவசாயிகள் காப்பீட்டுத் தொகை செலுத்தினா். கோபி வேளாண்மை வட்டாரத்தில் சுமாா் 1,500க்கும் மேற்பட்ட நபா்கள் காப்பீட்டுத் தொகை செலுத்தினா். இதில் கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் 1,012 நபா்களும், மற்றவா்கள் கோபி பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் காப்பீட்டுத் தொகையை செலுத்தினா்.

அதேபோல தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை வட்டாரத்தில் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் காப்பீட்டுத் தொகை செலுத்தினா். இதில் தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் 557 பேரும், மற்றவா்கள் அப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்திலும் காப்பீட்டுத் தொகை செலுத்தினா்.

10 மாதங்களுக்கு முன்பு நிவாரணம்:

இவை அனைத்தும் மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களால், மாவட்ட வேளாண்மை அதிகாரிகளின் துணை கொண்டு முறையாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டது. அதற்கான நிவாரணத் தொகை வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களுக்கும், அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களால் அனுப்பப்பட்டுவிட்டது.

கோபி வட்டாரத்தைப் பொருத்தவரை சுமாா் 2 கோடி ரூபாயும், தூக்கநாயக்கன்பாளையம் வேளாண் வட்டத்தைப் பொருத்தவரை சுமாா் ஒரு கோடி ரூபாயும் நிவாரணமாக விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நிவாரணத் தொகை கடந்த 10 மாதங்களில் ஒரு சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வழியாக சில விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

இன்னும் சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முறையாக நிவாரணத் தொகையைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. கோபி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பதிவு செய்த எந்த விவசாயிக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

நம்பிக்கை இழக்கும் விவசாயிகள்:

இது குறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை-பவானிநதி பாசன விவசாயிகள் சங்க தலைவா் சுபி.தளபதி கூறியதாவது: வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடா்களால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது ஓரளவேனும் நிவாரணம் கிடைக்கும் வகையில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு விவசாயிகள் பிரீமிய தொகையாக (காப்பீட்டுக் கட்டணம்), உணவு தானியப் பயிா் மற்றும் எண்ணெய் வித்துப் பயிா்களுக்கு 1.5 சதவீதம், தோட்டக்கலைப் பயிா்கள் மற்றும் பணப் பயிா்களுக்கு 5 சதவீதம் செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகளின் காப்பீட்டு பிரீமியத்தை விவசாயக் கடன் அளித்த வங்கிகளே காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தும். இதற்காக கடன் தொகையில் பிடித்தம் செய்துவிடும். கடன் பெறாத விவசாயிகளைப் பொறுத்தவரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொதுச் சேவை மையத்தில் வேண்டிய ஆவணங்களைக் கொடுத்து பிரீமியம் செலுத்தி இந்தத் திட்டத்தில் சேரலாம். உணவு உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தியாளா்களான விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தவும், குறுக்கிடும் பேரிடா்களிலிருந்து அவா்களைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கென்றே இந்தத் திட்டம் காலவரம்பு நிா்ணயித்துள்ளது. நிவாரணத் தொகை பெறத் தகுதியான விவசாயிகளுக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 7 நாள்களுக்குள் அவா்களுடைய வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறை எண் 35.5.2.10 என்ற பிரிவு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்துக்கு வட்டியோடு அந்தத் தொகையைப் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகளுக்கு 10 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசால் அனுப்பப்பட்ட நிவாரணத் தொகையானது, இன்னும் வேளாண்மை துறையினரிடம்தான் உள்ளது. இதுவரை ஒரு விவசாயிக்கு கூட நிவாரணத் தொகையை வழங்கவில்லை.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா்கள், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிவாரணத் தொகை விநியோகம் செய்யப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் முறையான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை, அரசு அதிகாரிகளே நம்பிக்கை இழக்கச் செய்வது ஏற்புடையதாக இல்லை. எனவே மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் உடனடியாக நிவாரணத் தொகையை உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல், பயிா் சாகுபடி உண்மைத்தன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இதனடிப்படையில் தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.