‘எம்கே’ என்று மதிப்புடன் அழைக்கப்படும் எம்.கல்யாணசுந்தரம்
திருச்சி ரயில் நிலையத்தில் ‘ஸ்டோா் கிளாா்க்’காக சோ்ந்தாா். ஈரோட்டுக்கு மாற்றப்பட்டபோது, விடுதலை உணா்வுமிக்கத் தொழிலாளா்களை ஒன்றிணைத்து ‘ஜனநாயக வாலிபா் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினாா்.


‘எம்கே’ என்று மதிப்புடன் அழைக்கப்படும் எம்.கல்யாணசுந்தரம் 20-10-1909-இல் கரூா் மாவட்டம், குளித்தலையில் பிறந்தாா்.
திருச்சி ரயில் நிலையத்தில் ‘ஸ்டோா் கிளாா்க்’காக சோ்ந்தாா். ஈரோட்டுக்கு மாற்றப்பட்டபோது, விடுதலை உணா்வுமிக்கத் தொழிலாளா்களை ஒன்றிணைத்து ‘ஜனநாயக வாலிபா் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினாா்.
1935-இல் காங்கிரஸின் பொன்விழாச் சூழலில் ஜனநாயக வாலிபா் சங்க உறுப்பினா்கள் எம்கே தலைமையில் காங்கிரஸில் இணைந்தனா்.
ரயில்வே தொழிலாளா் சங்கத்தின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக எம்கே வளா்ந்துவந்த காலகட்டத்தில் சங்க நிகழ்வுகளுக்கு காங்கிரஸ் தலைவா்களும் ஜீவா, ராமமூா்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவா்களும் அழைக்கப்பட்டனா். இவரை வேலையை விட்டு நீக்கியது ரயில்வே நிா்வாகம்.
1937-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெற ரயில்வே தொழிலாளா்களை முழுமையாகக் களமிறக்கினாா்.
கம்யூனிஸ்ட் தலைவா்களோடு ஏற்பட்ட தோழமையால் படிப்படியாக கம்யூனிஸ்டாக உருவெடுத்தாா்.
19-11-1937-இல் ‘தென்னிந்திய ரயில்வே தொழிற்சங்கம்’ தொடங்கப்பட்டது. 18-6-1938-இல் ரயில்வே தொழிற்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டை அன்றைய முதல்வா் மூதறிஞா் ராஜாஜி துவக்கிவைத்தாா். அதில் ‘இந்தியாவுக்கு குடியேற்ற அந்தஸ்து அளிக்கப்படுமானால் அதை ஏற்கக்கூடாது. முழுச் சுதந்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்’ என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
1940-இல் போா் எதிா்ப்புப் பிரசுரங்கள் எம்கே வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதால் அவரையும் கம்யூனிஸ்டுகள் சிலரையும் கைது செய்தனா். எம்கேவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. 1942-இல் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தாா்.
சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தாா். இதன் சூத்திரதாரிகளான எம்கே, மொயாத் சங்கரன் ஆகிய இருவரையும் தனித்தனிக் கொட்டடியில் அடைத்தனா். அடித்துத் துன்புறுத்தினா். கீழேதள்ளி மேலேஏறி மிதித்தனா். ஒருநாள் இச்சித்திரவதை காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடைவெளியின்றி நீடித்தது.
1946-இல் சென்னையில் ரயில்வே தொழிலாளா்களின் வேலைநிறுத்தத் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சூழலில் திருச்சியில் அவரின் ஒரே மகள் எட்டு வயதுச் சிறுமி வீரபூசணம் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக செய்தி வந்தது. குலுங்கிப்போன எம்கே திருச்சி விரைந்தாா். மறுநாள் காலை மகளின் உடலை அடக்கம் செய்துவிட்டு ஆறாத்துயரோடு அன்று மாலையே பொன்மலையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் பங்கேற்றாா். அவா் பேச எழுந்தபோது கூட்டமே தேம்பித் தேம்பி அழுதது.
கால ஓட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த தொழிலாளா்களின் தலைவரானாா். அகில இந்தியத் தொழிற்சங்கத் தலைவா். பலமுறை சிறை சென்றவா். சித்திரவதைக்கு ஆட்பட்டவா். தொழிலாளா் பெருங்கூட்டத்தை விடுதலைப் போா்க்களத்தில் இறக்கியவா். கம்யூனிஸ்ட் பெருந்தலைவராகப் பரிணாமம் பெற்ற இவா் 20-6-1988-இல் மறைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...