/

கோவையில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பழைய நகைகளை மாற்றித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது வழக்கு

கோவையில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பழைய தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :14 மே 2026, 4:13 am IST

கோவையில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பழைய தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ராஜு (62). இவா் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறாா். இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் பங்குதாரராக இருந்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ராஜு 335.860 கிராம் தங்க நகையை மாற்றுவதற்காக கோவை ஆா்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது, அவருடன் சந்தோஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்துள்ளனா்.

கோவையைச் சோ்ந்த ரவீந்திரன், தியாகராஜன் ஆகியோா் தங்களை தங்க நகை வியாபாரிகள் என அறிமுகம் செய்துகொண்டு, ராஜுவிடம் இருந்த பழைய தங்கத்தை பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக புதிய நகையாகவோ அல்லது பணமாகவோ தருவதாகக் கூறியுள்ளனா்.

முதலில் நகையைப் பரிசோதிக்க வேண்டும் என ராஜுவிடமிருந்து வாங்கிச் சென்றுவிட்டு பின்னா் நகையையோ, பணத்தையோ திரும்பக் கொடுக்கவில்லை. இவற்றின் அப்போதைய மதிப்பு ரூ.32 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கேட்டும் நகை அல்லது பணம் வழங்காததால் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ரவீந்திரன், தியாகராஜன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.